2027 வரவு செலவு திட்டம்! உண்மை விவரங்களை அம்பலப்படுத்தியுள்ள மனோ கணேசன்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தில் மலையகத் தமிழ் மக்களின் சமூக நல்வாழ்வுக்காக 13000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுவதில் உண்மையில்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட செய்திக்குறிப்பில் மேலும், மலையகத் தமிழ் மக்களின் சமூக நல்வாழ்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 13 ஆயிரம் மில்லியன் ரூபா தொகை பற்றிய உண்மை விவரங்களை வெளிப்படையாகக் கூற விரும்புகின்றேன்.
பெருந்தோட்டத் கைத்தொழில் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, மலையகத் தமிழ் மக்களின் சமூக நலத் திட்டங்களுக்காக ஒதுக்கினோம் என்று கூறாதீர்கள். பின்தங்கிய எமது மக்களின் நேரடி காணி, வீடு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்காக விசேட நிதி ஒதுக்கீட்டை நீங்கள் வழங்கவில்லை என்பதை மறைத்து, இல்லாததை இருப்பதாகக் காட்டி, மனச்சாட்சியே இல்லாமல் பொய் கூறாதீர்கள்.
கூசாமல் கூறப்படும் பொய்கள்

பெருந்தோட்டத் கைத்தொழில் துறைக்கு ஒதுக்கிய ஒதுக்கீட்டை, மக்களின் சமூக நலப் பணிகளுக்கான ஒதுக்கீடுகள் எனக் கூசாமல் கூறப்படும் பொய்கள், நண்பர் நிதி அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பெயரைக் களங்கப்படுத்தும் மலையளவு - மகா மலைநாட்டுப் பொய்கள் என்பதை ஜனாதிபதியிடம் நேரடியாகத் தெரிவித்துள்ளேன்.
ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திஸாநாயக்க, தேயிலை, இறப்பர், தென்னை, பனை ஆகிய இலங்கையின் பெருந்தோட்டத் கைத்தொழில் துறைக்கு ஒதுக்கிய 13 ஆயிரம் மில்லியன் ரூபா தொகையின் உண்மையான விவரங்கள் பின்வருமாறு:-
01. அம்பாந்தோட்டை, புத்தளம், வட - கிழக்கு பனை செய்கை விரிவாக்கம்: ரூபா 100 மில்லியன்
02. தென்னை புனர்வாழ்வு: ரூபா 2,500 மில்லியன்
03. இறப்பர் மர ஆராய்ச்சி: ரூபா 500 மில்லியன்
04. தேயிலை தொழில் பேட்டைகள்: ரூபா 730 மில்லியன்
05. தேயிலை, இறப்பர், தென்னை, பனை துறை ஊழியர்களின் பிரஜாசக்தி அபிவிருத்தி: ரூபா 3,000 மில்லியன்
06. தரிசு நில மீள் நடுகை தேயிலை சிறு தோட்ட முதலாளிகளுக்கு மானியம்: ரூபா 820 மில்லியன்
07. பெருந்தோட்ட தேயிலை முதலாளிகளுக்கு உர மானியம்: ரூபா 5,000 மில்லியன்
08. இறப்பர் தோட்ட முதலாளிகளுக்கு மீள் நடுகை மானியம்: ரூபா 650 மில்லியன்
09. தோட்ட முதலாளிகளுக்கு இறப்பர் உர மானியம்: ரூபா 1,000 மில்லியன் இத்துடன் கடந்த வருடம் வழங்கப்பட்ட 200 ரூபா சம்பள உயர்வு மீண்டும் வழங்கப்படுகிறது.
சம்பள உயர்வை வழங்கக் கடும் கெடுபிடி

இதை முறையாக வழங்காமல் தேயிலை கொளுந்து நிறையை அதிகரித்து, கம்பனிகள் சம்பள உயர்வை வழங்கக் கடும் கெடுபிடி செய்கிறார்கள்.
அதனால், இம்முறை சம்பள உயர்வைச் சம்பள நிர்ணய சபை மூலம் வர்த்தமானியாக வெளியிடச் சொன்னேன். நான் சொன்னதை இந்த ஜனாதிபதி கேட்கவும் இல்லை, செய்யவும் இல்லை. உண்மையில் 13 ஆயிரம் மில்லியன் ரூபாயை விட அதிகமாகவே தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது இவர்கள் காட்ட முயல்வது போன்று மலையகத் தமிழ் மக்களின் காணி, வீடு, கல்வி, வீதிகள், சுகாதாரம், மந்தபோசனை மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய சமூக, பொருளாதார, கலாச்சார நலன்களுக்காகப் பெற்றுத் தரும் திட்டங்களுக்காக அல்ல. உண்மையில், அரசு இத்தகைய ஒரு தொகையை மலையக மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சார நலன்களுக்காக ஒதுக்கியிருந்தால், வரவு செலவு திட்ட வாசிப்பு நேரத்திலேயே எழுந்து நின்று, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை வாழ்த்திப் பாராட்டும் முதல் கட்சுத் தலைவராகவும் எம்.பியாகவும் நான் இருந்திருப்பேன். ஆனால், அது நடக்கவில்லை என தெரிவித்துள்ளார்.