இலங்கையர்களை குறிவைத்து ஆட்கடத்தல் சதித்திட்டம்! விமான நிலையத்தில் சிக்கிய முக்கிய புள்ளி
இலங்கை மனித கடத்தல் வழக்கில் கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்து தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபரை தேசிய புலனாய்வு முகமை (NIA) பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்துள்ளது.
புதுமடம் இம்ரான் என்ற முக்கிய சந்தேகநபர் இந்திய அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இன்டர்போல் சிவப்பு அறிக்கை
தேசிய விசாரணை முகவரகத்தின் கோரிக்கையின் பேரில் விடுக்கப்பட்ட இன்டர்போல் சிவப்பு அறிக்கைக்கமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், கடந்த 13ஆம் திகதி பெங்களூரு கெம்பகௌடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து NIA குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டப்பூர்வ கடவுச்சீட்டுகள் மூலம் கனடாவுக்குச் செல்ல வழிவகுப்பதாக உறுதியளித்து, இலங்கை குடிமக்களை முறைகேடான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பும் சதித்திட்டத்தில் இவர் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பெருமளவில் பணம் மீட்பு
இதற்காக, அவர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்களிடமிருந்து பணத்தை வசூலித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து பெருமளவில் பணத்தைச் சேகரித்த அவர், ஹவாலா (Hawala) முறையைப் பயன்படுத்தி இந்தியாவின் பிற சந்தேகநபர்களுக்கு பணத்தை அனுப்பியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இந்த மோசடியுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
கனடாவுக்கு அனுப்புவதாகக்கூறி இலங்கையர்களை ஏமாற்றும் இந்த சட்டவிரோத மனித கடத்தல் வலையமைப்பு தொடர்பில் தேசிய விசாரணை முகவரகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான விசாரணைகளின் மற்றுமொரு முக்கிய கைது நடவடிக்கையாக அவை அமைந்துள்ளது.