ஆடம்பர வாழ்க்கைக்குப் பின்னால் என்ன! ஷிரான் பாசிக்கிடம் 90 நாட்கள் விசாரணை..
பாரிய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் ஷிரான் பாசிக்கிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) அனுமதி பெற்றுள்ளது.
இலங்கையுடன் தொடர்புடைய பாரிய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஷிரான் பாசிக், 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் துபாயில் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர், கடந்த ஒகஸ்ட் 14ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
மேலதிக விசாரணை
அவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, அவரிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணிநேர தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றிருந்ததுடன், பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

தற்போது மேலதிகமாக 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, துபாயிலுள்ள சொகுசு வணிக வளாகமொன்றுக்குச் சென்றிருந்தபோது அந்நாட்டு பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டதாக ஷிரான் பாசிக் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
துபாயில் கைது
இதன்போது அவரது கைத்தொலைபேசியைச் சோதனையிட்ட பொலிஸார், அதில் ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் தொடர்பான காணொளிகள் இருந்ததைக் கண்டறிந்ததையடுத்து தம்மைக் கைது செய்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும், ஈரானுடனான தொடர்புகள் குறித்து துபாய் அதிகாரிகள் தம்மிடம் விசாரணை நடத்தியதாகவும், இலங்கைக்குத் திரும்புவதற்கான விமானப் பயணச்சீட்டைத் தாமே கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஷிரான் பாசிக்கிற்கு எதிராக முன்னர் பிறப்பிக்கப்பட்டிருந்த சர்வதேச பொலிஸாரின் (Interpol) சிவப்பு அறிவித்தல் மீளப்பெறப்பட்டிருந்ததாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இலங்கை அதிகாரிகள் அவருக்கு எதிராகப் புதிய சிவப்பு அறிவித்தலைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது, அவர் துபாயில் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஷிரான் பாசிக்
பொலிஸ் தகவல்களின்படி, ஷிரான் பாசிக் 2018ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் திகதி சட்டபூர்வமாக இலங்கையிலிருந்து துபாய்க்குச் சென்றுள்ளார்.
அங்கு அவர் இரண்டு வர்த்தக நிறுவனங்களை நடத்தி வந்ததுடன், ஆடம்பரமான வாழ்க்கை முறையையும் பின்பற்றி வந்ததாக விசாரணையாளர்கள் நம்புகின்றனர்.

இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுடனான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
90 நாட்கள் தடுப்புக் காவல் அனுமதியின் கீழ், ஷிரான் பாசிக்கிடம் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக தகவல்களைத் திரட்டவும் விசாரணையாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.