குகைக்குள் குழந்தை பிரசவித்த 15 வயது சிறுமி! கைது செய்யப்பட்ட இளைஞருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நக்கிள்ஸ் பகுதியில் குகையொன்றில் தங்கியிருந்து 15 வயது சிறுமியொருவர் குழந்தை பிரசவித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 வயது சந்தேகநபர் இன்று (15) தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதை தொடர்ந்து ஐந்து இலட்சம் ரூபாய் தனிநபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியல் உத்தரவு
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் உறவினர் என்று கூறப்படும் 36 வயது நபரை, 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சுமார் 5 மாதங்களுக்கு முன்பு சிறுமி காணாமல்போனதாக அவரது குடும்பத்தினரால் உடுதும்பர பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், குகைக்குள் இரண்டு மாத குழந்தையுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
கடையொன்றில் ஒரு நபரின் தினசரி தேவைக்கு அதிகமாக அரிசி வாங்கிய இளைஞர் மீது பொலிஸ் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரை பின்தொடர்ந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள், குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு காட்டில், மெழுகு துணியால் மூடப்பட்டிருந்த ஒரு குகையில், இரண்டு மாத குழந்தையுடன் சிறுமியை கண்டுபிடித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணையின் போது, அந்த சிறுமி குகையிலேயே குழந்தையை பிரசவித்ததும், பிரசவத்திற்குப் பிறகு, கித்துல் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கூர்மையான கருவியால் குழந்தையின் தொப்புள்கொடி வெட்டப்பட்டதும் தெரியவந்துள்ளது.
தாய்க்கும் இரண்டு மாத குழந்தைக்கும் மேலதிக சிகிச்சை
காட்டில் கிடைத்த வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தி தாய்க்கும் குழந்தைக்கும் சிகிச்சை அளித்ததாகவும், கித்துல் தேன் தயாரிக்க பயன்படுத்தப்படும் பானையில் குழந்தையை குளிப்பாட்டியதாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட இளைஞரையும், அவருக்கு உதவியதாக கூறப்படும் உறவினரையும் உடுதும்பறை பொலிஸார் நேற்று (14) கைது செய்தனர்.
மேலும், பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட 15 வயது சிறுமியான தாயையும், இரண்டு மாத குழந்தையையும் சுத்தம் செய்து, மேலதிக சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்காக கண்டி தேசிய மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் எடுத்துள்ளனர்.

