பெரும் நிதி நெருக்கடியில் ஸ்ரீலங்கன் விமான சேவை - எடுக்கப்பட்டுள்ள அவசர நடவடிக்கை
ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று ஆண்டு காலப்பகுதில் அதன் செலவுகளை ஈடுகட்டக்கூடிய நிலைக்கு கொண்டுவருவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன.
விரிவான அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
இதற்கமைய, விரிவான அறிக்கையொன்றை இம்மாதம் 30 திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்திற்கும், அமைச்சுக்கும் சமர்ப்பிக்குமாறு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியுள்ளது.
ஸ்ரீ லங்கன் விமான சேவை எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடி, விமானப் பயணத் தாமதங்கள், கடன் சுமை மற்றும் புதிய விமானங்களை கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள கொள்வனவு நடைமுறைத் தாமதங்கள் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
தற்போது 23 விமானங்களைக் கொண்டுள்ள விமான சேவையின் விமான தொகுதி போதுமானதாக இல்லாமை மற்றும் அந்த விமானங்கள் சுமார் 12 வருடங்கள் பழைமையானவையாக இருப்பதால் விமானப் பயணங்களைப் பாதிக்கும் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் தாமதங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது புதிய விமானங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான விசேட கொள்வனவு வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை வர்த்தமானியில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
விமான கொள்வனவு நடவடிக்கை
அத்துடன், கொள்வனவு நடவடிக்கைகளை நேரடியாகக் கண்காணிப்பதற்காக அமைச்சு மட்டத்தில் விசேட கொள்வனவு பிரிவொன்றும் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, எதிர்வரும் ஜூன் மாதமளவில் புதிய குறுகிய உடற்பகுதியைக் கொண்ட விமானமொன்றையும், அகன்ற உடற்பகுதியைக் கொண்ட இரண்டு விமானங்களையும் விமானத் தொகுதியில் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
2029ஆம் ஆண்டளவில் விமானத் தொகுதியை ஆகக்குறைந்தது 29 விமானங்களாக அதிகரிப்பது ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்காகும் என்றும் கூறப்படுகின்றது.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் பழைய வங்கிக் கடன்கள் மற்றும் பிணைமுறிக் கடன்கள் உள்ளிட்டவற்றைப் பொறுப்பேற்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை திறைசேரி முன்னெடுத்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.