விண்வெளி வரலாற்றில் வொயேஜர் 1 விண்கலம் புதிய சாதனை - நாசா வெளியிட்ட அறிவிப்பு
நாசா நிறுவனத்தின் வொயேஜர் 1 விண்கலம், விண்வெளியில் ஒரு ஒளி நாள் (Light Day) தூரத்தை நிறைவு செய்த உலகின் முதல் மனிதனால் உருவாக்கப்பட்ட பொருளாக மாறுவதற்கு நெருங்கியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
இதற்கமைய, விண்வெளியில் 16.09 பில்லியன் மைல்கள் பயணித்தால் ஒரு ஒளி நாள் தூரம் நிறைவடையும் நிலையில், வொயேஜர் 1 விண்கலம் எதிர்வரும் 18ஆம் திகதிக்குள் அந்த தூரத்தை எட்டும் என தெரியவந்துள்ளது.
இந்த விண்கலம் 1977ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி, புளோரிடாவின் கேப் கனாவரலில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
வொயேஜர் 1 விண்கலத்தின் பணி
சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கோள்களான வியாழன் மற்றும் சனி மற்றும் அவற்றின் துணைக்கோள்களை நெருக்கமாக ஆய்வு செய்வதே இதன் பிரதான நோக்கமாக இருந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த பிரதான பணியை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர், வொயேஜர் 1 விண்கலம் சூரியனின் தாக்கம் முடிவடையும் எல்லைக்கு அப்பால் சென்று, விண்மீன்களுக்கு இடையிலான விண்வெளியை (Interstellar Space) ஆராயவும் பயன்படுத்தப்பட்டது.
சனிக்கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டனில், நைட்ரஜன் அதிகம் நிறைந்த அடர்த்தியான வளிமண்டலம் இருப்பதை உறுதிப்படுத்தியது வொயேஜர் 1 விண்கலம், கடந்த 1990ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி, சுமார் 6 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்து பூமியை நோக்கி தனது கேமராவைத் திருப்பி, Pale Blue Dot என அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தையும் வொயேஜர் 1 பதிவு செய்துள்ளது.

2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் திகதி, சூரியனின் காந்தப்புல எல்லையைக் கடந்து விண்மீன்களுக்கு இடையிலான விண்வெளிக்குள் நுழைந்த முதல் விண்கலமாகவும் வொயேஜர் 1 வரலாற்று சாதனை படைத்துள்ளது.
பொதுமக்களுக்கு நாசா விடுத்துள்ள அழைப்பு
விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டபோது அதில் சேர்க்கப்பட்டிருந்த தகவல்கள் குறித்து நாசாவில் பணியாற்றும் இலங்கையைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி டாக்டர் சரத் குணபால தெரிவிக்கையில்,
“அதில் 12 அங்குல அளவிலான பிளாட்டினம் தகடும், தங்கத் தகடும் உள்ளன. நமது சூரியன், விண்மீன் மண்டலம் மற்றும் பூமி தொடர்பான தகவல்களுடன், பூமியில் உள்ள பல்வேறு ஒலிகளும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் சுமார் 55 மொழிகளில் வாழ்த்துச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ‘ஆயுபோவன்’ என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளது.
புத்திசாலித்தனமும் மேம்பட்ட தொழில்நுட்பமும் கொண்டு விண்வெளியில் பயணிக்கும் திறன் கொண்ட ஒரு நாகரிகம், ஏதேனும் ஒரு நாள் இதைக் கண்டுபிடித்தால், பிரபஞ்சத்தின் அந்தப் பகுதியில் அல்லது விண்மீன் மண்டலத்தின் அந்தப் பகுதியில், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உயிரினங்கள் வாழ்ந்திருந்தன என்பதை அவர்கள் அறிந்துகொள்ள முடியும்” என்றார்.
விண்வெளி வரலாற்றில் இந்த விண்கலம் படைக்கவுள்ள இந்த சிறப்புமிக்க மைல்கல்லை உலக மக்களுடன் கொண்டாடுவதற்கு நாசா அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி, நவம்பர் 17ஆம் திகதி சூரியன் மறைந்த பின்னர், தங்களது கையடக்கத் தொலைபேசிகள் அல்லது ஏனைய ஒளி சாதனங்களை வானத்தை நோக்கி ஒளிரச் செய்து, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை கொண்டாடுமாறு நாசா உலக மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.