தொண்டைமானாறு நீரேரியில் அமைந்துள்ள நடைபாதைப் பாலம் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின், தொண்டைமானாறு நீரேரியில் அமைந்துள்ள உவர்நீர் தடுப்பணையுடன் இணைந்த நடைபாதைப் பாலம் இன்று (15.11.2026) காலை முதல் நாளை மதியம் 12 மணி வரை திறக்கப்படவுள்ளது.
கந்தசஷ்டி விரதத்தின் ஆறாம் நாளான சூரன்போர் உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் இலகுவாகப் பயணிப்பதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
நடவடிக்கை
வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவும், அவரது பணிப்பின்படியும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை தொடர்பில், திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் பொறியியலாளர் சி.விகிர்தன் அறிவித்துள்ளார்.
குறித்த தடுப்பணையுடன் இணைந்த நடைபாதை பாலம், செல்வச்சந்நிதி ஆலயத்தையும் நீரேரியின் மறுகரையையும் நேரடியாக இணைப்பதால், சூரன்போர் உற்சவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் சுற்றுப்பாதையைத் தவிர்த்து இலகுவாக ஆலயத்தைச் சென்றடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.