அடுத்த மூன்று ஆண்டுகளில் 7,000 மருத்துவர்கள் நியமனம்: சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையின் அரச சுகாதார சேவையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 7,000 மருத்துவர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
2027, 2028 மற்றும் 2029 ஆம் ஆண்டுகளுக்கான மருத்துவப் பணியாளர் தேவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் மருத்துவமனைகளில் நிலவும் வெற்றிடங்கள், ஓய்வுபெறுதல் மற்றும் மருத்துவர்களின் மரணம் காரணமாக ஏற்படும் வெற்றிடங்கள் நிரப்பப்படும்.
புதிய ஆளணி கட்டமைப்பு
2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதுப்பிக்கப்படாத மருத்துவப் பணியாளர் ஆளணி கட்டமைப்பு தற்போது மறுசீரமைக்கப்படுகிறது.இதற்கான அனுமதியை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் 25 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் மருத்துவ பீடங்கள் இயங்கி வருகின்றன.அந்த இடங்களில் தற்போது சுமார் 12,000 மாணவர்கள் மருத்துவக் கல்வியைத் தொடர்கின்றனர்.

இந்த நிலையில், பயிற்சிக் காலத்தை நிறைவு செய்யும் பெரும்பாலான மருத்துவப் பட்டதாரிகளை அரச சுகாதார சேவையில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம், மருத்துவர்களுக்கான முதல் நியமனங்களில் நிலவி வந்த சிக்கல்களுக்கும் புதிய ஆளணி கட்டமைப்பு மூலம் தீர்வு கிடைக்கும் என சுகாதார அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.