அனைத்து மாணவர்களும் தவறாமல் பாடசாலைக்குச் செல்ல வேண்டும்! பிரதமர் வலியுறுத்து
க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குத் தயாராகும் மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் தவறாமல் பாடசாலைக்குச் செல்ல வேண்டும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
அக்கரைப்பற்று முஸ்லிம் தேசிய பாடசாலையின் 80ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய அவர், ஒவ்வொரு குழந்தைக்கும் 13 ஆண்டுகால கல்வி கிடைக்க வேண்டும் என்றும், பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதை பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக 749 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 562.4 பில்லியன் ரூபாய் பாடசாலைக் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தலைமைத்துவம்
மேலும், 2026ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் 2027ஆம் ஆண்டு 2ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

பரீட்சைகளில் சித்தியடைவதை மாத்திரம் இலக்காகக் கொள்ளாமல், தலைமைத்துவம், குழுப்பணி, தொழில்நுட்பம் மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான நடைமுறைத் திறன்களையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.