தொடர் கனமழையால் வான்பாயும் நிலையில் 14 நீர்த்தேக்கங்கள் திறப்பு - வெளியானது அறிவிப்பு
நாட்டில் நிலவி வரும் பலத்த மழை காரணமாக 14 பிரதான நீர்த்தேக்கங்களும், 11 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாயும் நிலையை அடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, அதிகப்படியான நீரை வெளியேற்றும் பொருட்டு 5 பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வான்கதவுகள் திறப்பு
இதன்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் தலா 5 அடிகளாலும், நான்கு கதவுகள் தலா 4 அடிகளாலும், மேலும் இரண்டு கதவுகள் தலா 3 அடிகளாலும் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 22,400 கன மீற்றர் வீதத்தில் தண்ணீர் தெதுரு ஓயாவிற்குள் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் தலா 5 அடிகளாலும், நான்கு கதவுகள் தலா 4 அடிகளாலும், நான்கு கதவுகள் தலா 3 அடிகளாலும், இரண்டு கதவுகள் தலா 2 அடிகளாலும் திறக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை
இந்த நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 14,288 கன மீற்றர் வீதத்தில் நீர் கலா ஓயாவிற்குள் வெளியேற்றப்பட்டு வருகின்றது. கிம்புல்வான ஓயா, அபேகொல வெவ மற்றும் அலிகொட ஆர ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதை நீர்ப்பாசனத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனிடையே, 2 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனை தவிர 9 நடுத்தர நீர்த்தேக்கங்கள் வான்பாயும் நிலையை எட்டியுள்ளன.
இதனை தொடர்ந்து, பெய்து வரும் கனமழைக்கு மத்தியில், அதிகாரிகள் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.