மின் கட்டண உயர்வு மற்றும் மின் தடை தொடர்வது ஏன்! அரசிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி
மின் உற்பத்திச் செலவு குறைந்துள்ள போதிலும் மற்றும் மாற்று நீர்மின் சக்தி உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், கட்டண உயர்வும் மின் தடையும் தொடர்வதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று(22.10.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "கடந்த அரசில் மின்சார சபையானது மாபியாக்களிடம் சிக்கியுள்ளதாகவும், ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதாகவும், தடையற்ற மின்சாரத்தை வழங்குவதாகவும் தற்போதைய அரசு தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போதும் கடந்த காலத்தைப் போலவே மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மின் தடையும் நாள்தோறும் ஏற்படுகின்றது.
மின்சாரத்துறை
தேசிய மக்கள் சக்தி அரசு பதவியேற்றதுடன் மின்சாரத்துறை சில மாபியாக்களிடம் சிக்கியுள்ளது என்றும், அதிலிருந்து மின்சாரத்துறை விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறி அதனை நான்கு பிரிவுகளாகப் பிரித்தனர்.

அவ்வாறு பிரிக்கப்பட்ட பிறகு, மின்சார உற்பத்தியிலும் விநியோகத்திலும் எத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை இந்த அரசு பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப நுகர்வோர் மீது சுமத்தப்பட்ட கட்டணங்கள் மிக இறுக்கமாக அதிகரிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஏற்ப உற்பத்தியும் விநியோகமும் சரியாக உள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.
உடனடி நடவடிக்கை
உலக நாடுகளில் இரண்டு நிமிடம் மின்சாரம் தடைப்பட்டாலே அது பெரிய பேசுபொருளாக மாறிவிடுகின்றது. ஆனால் இலங்கையில் பல முறை மின்சாரம் தடைபடுவது ஒரு அன்றாடச் செயல்பாடாக மாறிவிட்டது.

தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் மின்சார உற்பத்தி தடைபடுவதானது ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் பல மணி நேரம் பின்னோக்கி நகர்த்துகின்றது.
எனவே, அரசு இந்தத் தடைகளைக் கவனத்தில் கொண்டு மின் கட்டணத்தைச் சீரமைத்துத் தடையற்ற மின்சாரத்தை வழங்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.