சிங்கள தேசத்தில் 13ம் திருத்தச் சட்டம் ஒழிக்கப்பட்டுவிட்டது
இறந்தகால வெற்றிகளையும், தோல்விகளையும், கசப்புக்களையும், அழிவுகளையும், துன்ப துயரங்களையும் பிணங்களாக தோளில் சுமந்தபடி நிகழ்காலத்தினதும் எதிர்காலத்தினதும் வசந்தமான வாழ்வையும் வரலாற்றையும் சேற்றினுள்ளே புதைக்க முடியாது.
அரசியல் என்பது தான் சார்ந்த சமூகத்தின் பன்னெடுங்கால வரலாற்றின் தொடர்ச்சியாக எதிர்காலத்திலும் தன்சமூகம் பல்லாயிரம் ஆண்டு காலத்திற்கான தொடர் வாழ்வை நிர்ணயம் செய்வதாக அமைய வேண்டும்.
ஆனால் தமிழ் தலைவர்களோ கற்பனைகளிலும், தூய இலட்சியவாதங்களிலும் மூழ்கி சாத்தியமற்ற 13ம் திருத்தச் சட்டத்தை பற்றி பேசியே காலத்தை கழித்து தமிழினத்தை தொடர் அழிவுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அதேநேரம் சிங்கள மக்களினதும், சிங்கள தலைமைகளினதும், பௌத்த மகாசங்கத்தினதும் மனப்பாங்கில் 13ம் திருத்தச் சட்டம் ஏற்கனவே ஒழிக்கப்பட்டுவிட்டது.
இந்து சமுத்திர அரசியல் சூறாவளிக்குள் அகப்பட்ட தமிழின விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மே 2009ல் இந்து சமுத்திரத்தின் அடையாளத்தில் புதைக்கப்பட்டு விட்டது. கூடவே தமிழீழத் தேசியத் தலைவரும் மௌனித்துவிட்டார்.
இந்த நிலையில் கடந்த 14 ஆண்டுகளாக நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றி சிந்திக்காமல் இறந்த காலத்தைப் பற்றி தேடுவதிலும் அதனையே விதந்துபேசி புலகாங்கிதம் அடைந்து காலத்தை வீணடிக்கிறது தமிழினம்.
இந்துசமுத்திர அடியாழத்தில் புதைக்கப்பட்டதை தேடுவதை விடுத்து நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் நிர்ணயம் செய்வதற்கான வழியை தேடுவதே இன்றைய காலத்தின் தேவை.
அரசியலில் எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கத் தெரிந்த தீர்க்கதரிசனம் மிக்கவனே சிறந்த தலைவனாவான். அத்தகைய யாரையும் தமிழ் அரசியல் பரப்பில் காணமுடியாதுள்ளது.
வெற்று உரல்களுக்குள் உலக்கை கொண்டு அவல் இடித்தாற்போல் சாத்தியமற்ற, நடக்க முடியாத ஒன்றைப் பற்றி பேசி தம்மை வீர தீரர்களாக காட்டிக்கொள்ளும் அரசியல் வங்குரோத்துத்தனத்தை முதலில் நிறுத்தியாக வேண்டும்.
அடுத்தது என்ன என்பதைப் பற்றி தமிழ் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். நடைமுறைக்கு பொருத்தமான திட்டங்களை வகுத்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதனை எந்தத் தலைமை முன்வைக்கப் போகிறது. யாருக்கு பின்னே தமிழ் மக்கள் அணிதிரள்வது? 13ம் திருத்தச் சட்டம் சாத்தியமற்றது. அதனை ஒருபோதும் நடைமுறைப்படுத்த முடியாது.
கடந்த 36 ஆண்டுகளாக அதனை நடைமுறைப்படுத்த எந்த சிங்களத் தலைவர்களும் முன்வரவில்லை. அதனை நடைமுறைப்படுத்த சிங்கள பௌத்த மகா சங்கங்களும் அனுமதிக்கவில்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வாறே தமிழ் மக்கள் அதனை ஏற்கவில்லை என்பதும் உண்மைதான்.
அதேநேரம் கடந்த 36 ஆண்டுகால பெரும் யுத்த அழிவுகளுக்கு பின்னும், அதன் தொடர்ச்சியாக தற்போது ஏற்பட்டிருக்கின்ற பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கின்ற வேளையிலும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்குவதற்கு அல்லது ஆக குறைந்த அற்பசொற்ப சலுகைகளை கொண்ட 13ம் திருத்தச் சட்டத்தைக் கூட நடைமுறைப்படுத்த தயாரில்லை.
சிங்கள மக்களும் ஏற்கவில்லை, சிங்கள புத்திஜீவிகளும் ஏற்கவில்லை, பௌத்த மகா சங்கமும் ஏற்கவில்லை, சிங்கள இராணுவமும் ஏற்கவில்லை. அப்படியானால் நடைமுறை சாத்தியமற்ற ஒன்றைப் பற்றி ஏன் பேசவேண்டும். தமிழ் தலைவர்களே உங்களால் என்ன செய்ய முடியும்? யாரையும் குற்றம் சாட்டாமல் உங்களால் என்ன செய்ய முடியும்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ன என்பதை முதலில் எழுத்து வடிவில் முன்வையுங்கள். அந்தத் தீர்வு வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து அதற்கான செயற் திட்டத்தை முன்வைத்து அதற்காக போராடுங்கள்.
அந்த கொள்கைக்காக போராடாமல் இலக்கில் இருந்து தவறி அது வேண்டாம், இது வேண்டாம் என்பதற்கு ஒரு போராட்டம் வேண்டியதில்லையே.
இப்போது “எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் நாடாளுமன்ற ஆசனங்கள் அதிகமாக பெற்று விட்டால் நாங்கள் பேரம் பேசி தமிழர்களுக்கு தீர்வு பெற்று தந்து விடுவோம்“ என்று தமிழ் மக்களுக்கு பட்டோலை வாசிக்க வேண்டாம்.
கடந்த 75 ஆண்டுகளாக தமிழ் தலைவர்கள் கூறிய வார்த்தைகள் தமிழ் மக்களின் காதுகளில் புளித்துப் போய்விட்டது. இனியாவது உருப்படியான அரசியல் செயல்த்திட்ட வரைவை உருவாக்கி சாணக்கியத்துடன் தமிழர் அரசியலை முன்னெடுக்க முன்வாருங்கள்.
1947ல் ஜி.ஜி. பொன்னம்பலத்திற்கு தமிழ் மக்கள் அன்றைய முழுமையான 7 ஆசனங்களை வழங்கினார்கள் . அவரால் எதனையும் சாதிக்க முடிந்ததா? 50 க்கு 50 என்ற வெற்று கோஷத்துடன் தோற்றுப் போனார். அதற்குப்பின் 1956 இல் தந்தை செல்வாவுக்கு தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை வழங்கினார்கள் அவரால் எதனையும் சாதிக்க முடிந்ததா? பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் என்ற இரண்டு ஒப்பந்தங்களின் கிழிப்பின் பின்னும் தேசிய அரசாங்கத்துடன் இணைந்து பயணித்து அலைந்து திரிந்து களைத்து இறுதியில் தோற்றுப் போனார்.
1976 தமிழர் விடுதலைக் கூட்டணியில் அமிர்தலிங்கத்திற்கு பின்னே மக்கள் திரண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தையும் பிரகடனம் செய்து அதற்கமைய முழுமையான ஆசனங்களை தமிழ் மக்கள் கொடுத்தார்கள்.
ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியிடமிருந்து சமஸ்டியும் போய், தனிநாடும் போய், பிராந்திய சபை என்றும் பின்னர் மாவட்ட அபிவிருத்தி சபை என்று வந்து நின்று கடைசியில் ஒரு உப்புக்கல்லையாவது தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொள்ள முடிந்ததா? தொடர் ஆயுதப்போராட்டத்தின் விளைவால் 2004 இல் தமிழிழ விடுதலைப் புலிகளின் முழு ஆதரவை பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகூடிய 22 ஆசனங்களை பெற்று நாடாளுமன்றம் சென்றது.
தமிழர் தாயகத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுத பலமும் இலங்கை நாடாளுமன்றத்துக்குள் தாயகத்தின் முழுமையான தமிழ்த் தேசிய உறுப்பினர்களையும் கொண்டிருந்த காலத்திலும் எதனையும் சாதிக்க முடிந்ததா? சரி அதற்கு பின்னே முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் 2010லும் எதனையும் பெற முடியவில்லை.
அதற்குப்பின் 2015ல் சம்பந்தன் தலைமையில் தமிழ் மக்களின் பேராதரவை பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து "நல்லாட்சி அரசாங்கத்தை" நிறுவி அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேன்நிலவு அனுபவித்த காலத்தில் ஏதாவது ஒரு கச்சை துண்டையாவது பெற்று தமிழ் மக்களுக்கு நன்மை கிடைத்ததா ஒன்றுமே கிடைக்கவில்லை.
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கு தொடர் தோல்விகளும் ஏமாற்றங்களுமே பரிசாகக் கிடைத்தன.
இறுதியில் அனைத்து தலைவர்களும் தாங்கள் சிங்கள தலைவர்களால் ஏமாற்றப்பட்டோம் என்று கடந்த 75 ஆண்டுகளாக கூறி வருவது தமிழ் மக்களின் அறிவியலுக்கும், நீண்ட வரலாற்றுக்கும், தொன்மையான பண்பாட்டிற்கும் இழுக்கானது அவமானமானது.
கூடிய ஆசனங்களை பெற்று இலங்கை நாடாளுமன்றத்திற்கு சென்று தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுத்தர முடியுமா? தமிழ் மக்கள் முழுமையான நாடாளுமன்ற ஆசனங்களை தமக்குத் தந்தால் தாம் தீர்வைப் பெற்றுவிடுவோம் என்று கூறுவது சிறுபிள்ளைத்தனம் என்பதா? அல்லது கடைந்தெடுத்த சுயநலமும் ஏமாற்றும் என்பதா? இன்றைய இலங்கையின் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இப்போதுள்ள தமிழ் தேசியம் பேசுகின்ற 13 உறுப்பினர்களினால் எதனையும் சாதிக்க முடியுமா? ஏதாவது ஒரு மசோதாவை சட்டமாக்க முடியுமா? அல்லது ஏதாவது ஒரு சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க முடியுமா? இல்லையல்லவா.
தமிழ் மக்களால் உயர்ந்த பட்சம் நாடாளுமன்றத்துக்கு செல்லக்கூடிய ஆசனங்களின் எண்ணிக்கை 22ஐ தாண்ட மாட்டாது. அப்படியானால் இலங்கை நாடாளுமன்றத்துக்குள் ஒரு சட்டத்தை உருவாக்கவோ அல்லது மசோதாவை தோற்கடிக்கவும் முடியாது என்பதுதான் நடைமுறை யதார்த்தம்.
இந்த யதார்த்தத்தை முதலில் மக்களுக்கு சொல்லுங்கள். நம்மிடம் என்ன இருக்கிறதோ அதிலிருந்துதான் எதனையும் படைக்கவோ, சாதிக்கவோ முடியும். இந்த அடிப்படை உண்மையிலிருந்துதான் அரசியல் தலைமைகள் செயற்பட வேண்டும்.
தற்போது பல்தரப்புகளாலும் பேசப்படும் 13 ஆம் திருத்தச்சட்டம் தமிழ் மக்களுக்கு தீர்வாகுமா அல்லது அது நடைமுறைப்படுத்தப்படக் கூடியதொன்றா என்பதுதான் இங்கே முக்கியமானது.
புவிசார் அரசியலில் இந்தியாவைப் பொறுத்த வரையில் வெளியுறவு கொள்கை மாற்றம் ஒன்று இன்னும் நிகழவில்லை. அது ஏற்படுவதற்கான அரசியல் அவசியம்.
ஆனால் இலங்கையின் உள்நாட்டு அரசியலில் 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அல்லது இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது என்பது ஒருபோதும் சாத்தியமற்றது. அது காலம் கடந்து போய்விட்டது. நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றைப் பற்றி பேசுவதில் தற்போது எந்தப்பயனும் கிடையாது.
இலங்கை தீவில் ஈழத் தமிழர் பிரச்சினையில் உள்நாட்டு ரீதியில்
1)பௌத்த மகா சங்கங்களின் நிலைப்பாடு
2)சிங்களத் தலைவர்களின் மனப்பாங்கு
3)ஆட்சியாளர்களின் ராஜதந்திர நகர்வு
4) வரலாற்று ரீதியாக சிங்கள மக்களின் மகாவம்ச மனப்பாங்கு
5) சிங்கள இராணுவத்தின் மனநிலை
ஆகிய ஐந்து காரணிகளும் முக்கிய பங்காற்றுகின்றன.
இவை இறுக்கமான நிறுவன மயப்படுத்தலின் ஊடான கூட்டு மனப்பாங்காக உருப்பெற்று சிங்கள பௌத்த தேசியவாதம் முறுக்கேறி போய்விட்டது.
இந்நிலையில் 13ம் திருத்தச் சட்டம் என்பது சிங்களச் சமூகத்தைப் பொறுத்த அளவில் இந்தியா என்கின்ற அந்நிய சக்தியின் திணிப்பாகவே கருதுகின்றனர்.
ஜே. ஆர். ஜெயவர்த்தனா மீது அன்றைய ராஜீவ் அரசாங்கம் தனது பலத்தை பிரயோகித்து இலங்கையின் இறையாண்மையையும், சுதந்திரத்தையும் மீறி செய்து கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது என்றும் அது அந்நிய ஆக்கிரமிப்பின் சின்னமாக அரசியலமைப்பில் புகுத்தப்பட்டுள்ளது என்றுமே சிங்கள ஊடகங்களும், பௌத்த மகா சங்கங்களும், சிங்கள அரசியல் தலைவர்களும், சிங்கள புத்திக தீவிகளும் அடித்தட்டு சிங்கள மக்களுக்கு எடுத்துச் சென்று விதைத்து விட்டார்கள்.
இப்போது இந்த கருத்து சிங்கள சமூகத்தில் ஆழமாக பதிப்பிக்கப்பட்டுவிட்டது. இதனால் இந்திய எதிர்ப்பும் தமிழின எதிர்ப்புணர்வும் மேலோங்கி உள்ளது.
அதன் அடிப்படையில்தான் வரலாற்று ரீதியாக இந்திய எதிர்ப்பு வாதம் என்ற அடித்தளத்திலேயே 13ம் திருத்தச் சட்டம் சிங்கள தேசத்தில் பார்க்கப்படுகிறது.
சிங்கள தேசத்தில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13ஆம் திருத்தச் சட்டத்தை இல்லாத ஒழித்து மாகாண சபை ஆட்சி முறைமையை நீக்குவது என்பது உள்ளடங்கி இருந்தது.
தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச 69 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். அந்த வெற்றி என்பது மக்கள் ஆணை அதாவது 13ஆம் திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிப்பதன் மூலம் இலங்கை-- இந்திய ஒப்பந்தத்தையும் இல்லாத ஒழிப்பதாகவே அமையும்.
அதன் மூலம் இலங்கைத் தீவில் தமிழருக்கான பிரச்சினையில் இந்தியாவை முதலாவதாக வெட்டி விடுவதே சிங்கள ராஜதந்திரத்தின் முதல் பணியாக அமைகிறது.
இந்தியாவை வெட்டி விடுவதன் மூலம் ஈழத் தமிழர்களை இலங்கை தீவில் என்னவும் செய்யலாம் என்ற நிலையை உருவாக்கவே சிங்கள தேசம் கங்கணம் கட்டி நிற்கிறது.
அடுத்து பௌத்த மகா சங்கம் கூறும் 13ம் திருத்தச் சட்டமும் மக்கள் ஆணை கோட்பாடு பற்றி பார்க்க வேண்டியுள்ளது. அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்காவை சந்தித்த மகாநாயக்க தேரர்கள் 13ஆம் திருத்தச் சட்டத்தை அகற்றுவதற்கு மக்கள் ஆணை வழங்கிவிட்டார்கள் என்று குறிப்பிட்டனர்.
அந்த மக்கள் ஆணையின் பிரகாரம் 13ம் திருத்தச் சட்டம் தற்போது இலங்கை அரசியல் யாப்பில் இல்லாத போய்விட்டது. எனவே 13ம் திருத்தச் சட்டம் இலங்கை அரசியல் யாப்பில் தற்போது இருக்கிறது என்றும் அதனை நடைமுறைப்படுத்தப் போகிறேன் என்றும் ரணில் கூறுவது தவறானது என்றும் மகாநாயக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு அந்த மக்கள் ஆணை என்பது இலங்கை ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டதாகவே அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். கோட்டாபய இருக்கலாம் அல்லது பதவி துறந்து போகலாம் ஆனால் சிங்கள மக்கள் 13 ஆம் திருத்தச் சட்டத்தை அகற்ற ஆணை கொடுத்து விட்டார்கள். அந்த ஆணையை நிறைவேற்றுவதுதான் நடைமுறை ஜனாதிபதிகளின் பணியாக இருக்க வேண்டும் என்றும் மகாநாயக்கர்கள் வலியுறுத்திக் கூறுகின்றனர்.
இலங்கையின் எழுதப்படாத அரசியல் யாப்பாகவும் இலங்கை அரசை ஓட்டிசெல்லும் ஆட்சியாளராகவும் மகாசங்கமே உள்ளது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மகாசங்கம் எதனை எதிர்க்கிறதோ அது சிங்கள தேசத்தில் மறுகணமே இல்லாத ஒளிந்துவிடும்.
எனவே 13ம் திருத்தச் சட்டம் என்பதுவோ, இலங்கை -- இந்தியா ஒப்பந்தமோ தற்போது சிங்கள தேசத்தில் இல்லாது ஒழிந்துவிட்டது என்பதுதான் உண்மை. இதனை புரிந்து கொண்டுதான் தமிழ் தலைமைகள் தமிழ் மக்களுக்கான வழி வகைகள் பற்றி சிந்திக்க வேண்டும் இத்தகைய அகப்புற சூழமைவுகளை கருத்தில் கொள்ளாத தமிழ் தலைமைகள் 13ஆம் திருத்தச் சட்டம் என்கின்ற நடைமுறைக்குப் பொருத்தமற்ற ஒரு மாயைக்குள் அகப்பட்டு சாத்தியமற்ற விடயங்கள் பற்றி பேசுகின்றனர்.
இன்றைய நிலையில் ஒட்டுமொத்த சிங்கள சமூகத்தின் மனநிலையும், புவிசார் அரசியலில் இந்தியாவின் நோக்கு நிலையையும், சர்வதேச அரசியல் போக்கையும் கவனத்தில் கொண்டு முற்றிலும் நடைமுறைக்கு சாத்தியமான புதிய ஒரு வழியை தமிழ் தலைமைகள் எனப்படுவோர் தேட வேண்டும்.
மாறாக 13 வேண்டும், வேண்டாம், 13க்கு சற்று கூடுதலாக என்று நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்றைப் பற்றி பேசுவதும், சவப்பெட்டி காவி ஊர்வலங்கள், ஊடக விவாதங்களையும், மேடைகளில் காட்டுக்கத்து கத்துவதிலும் எந்தப் பயன் கிடையாது.
இலங்கை தீவைப் பொறுத்தவரையில் 13ஆம் திருத்தச் சட்டம் என்பது இல்லாத ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதுவே நடைமுறை யதார்த்தம். இலங்கை அரசும் இந்திய அரசும் தங்கள் அரசியல் மொழிக்குள்ளால் 13 பற்றி பேசிக்கொள்ளட்டும். அது ஒருபோதும் நடைமுறைக்குவராது என்பதும் நடைமுறைப்படுத்தப்பட முடியாது என்பதுமே வரலாற்று நியதி. இந்த நியதியைப் புரிந்துகொண்டு தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக்களுக்கான நடைச்சாத்தியமான அரசியலை இதயசுத்தியுடன் முன்வைத்துப் போராடவேண்டும்.

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
