இலங்கைக்கு - சீனாவில் இருந்து 10 பில்லியன் டொலர் முதலீடு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின்(Anura Kumara Dissanayake) அரசுமுறைப் பயணத்தின் விளைவாக, சீன நிறுவனங்களிடமிருந்து, சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்பு இலங்கைக்கு வாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், 2025 ஜனவரி 14 முதல் 17 வரையிலான காலப்பகுதியில், அநுர குமார சீனப் பயணத்தை மேற்கொண்டார்.
இந்தநிலையில், ஜனவரி 15ஆம் திகதியன்று, மக்கள் மண்டபத்தில், ஜனாதிபதி திஸாநாயக்கவை, சீன ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
சீன விஜயம்
இதன்போது, பொருளாதார மற்றும் வர்த்தக மேம்பாடு, முதலீடு, சுற்றுலா, டிஜிட்டல் மாற்றம் மற்றும் பலதரப்பு மன்றங்களில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
இதன் பின்னர், சீனப் பிரதமர் லி கியாங் மற்றும் சீன(China) தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி ஆகியோருடனும், அநுர குமார பேச்சுவார்த்தை நடத்தினார், இந்த அரசுமுறைப் பயணத்தின் போது, இரு தரப்பினரும் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MoU) பரிமாறிக் கொண்டனர்.
இதில் ஹம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஏற்றுமதி சார்ந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்திற்கான சினோபெக் குழும முதலீடும் அடங்கும். சீன அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் (SOE) மற்றும் நிறுவனங்களின் உயர் மட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட "இலங்கையில் முதலீடு செய்யுங்கள்" வட்டமேசை மாநாட்டிலும் ஜனாதிபதி திஸாநாயக்க உரையாற்றினார்.
டொலர் முதலீடு
இதன்போது, முன்னணி சீன நிறுவனங்கள், இலங்கைக்கு புதிய முதலீடுகளைக் கொண்டு வருவதிலும், தற்போதுள்ள முதலீட்டுத் திட்டங்களை விரிவுபடுத்துவதிலும் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியதாக, இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சீன நிறுவனங்கள், எரிசக்தி, வாகன உற்பத்தி மற்றும் கட்டுமானம் போன்ற பல்வேறு துறைகளில் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான முதலீடுகளை இலங்கைக்கு வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனங்களில், சைனா கொம்யூனிகேஷன்ஸ் கொன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட் (சிசிசிசி), சைனா பெட்ரோ கெமிக்கல் கோர்ப்பரேஷன் (சினோபெக் குரூப்), மெட்டலர்ஜிகல் கோர்ப்பரேஷன் ஒஃப் சைனா லிமிடெட் (எம்சிசி), ஹவாய் மற்றும் பிஒய்டி ஒட்டோ ஆகியவையும் அடங்கியிருந்தன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |