யான் ஓயா – வெலங்கா உல்பொத்த வீதி வெள்ளத்தில் உடைப்பு; போக்குவரத்து முற்றாகப் பாதிப்பு
திருகோணமலை, ஹொரவ்பொத்தானை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட யான் ஓயா – வெலங்கா உல்பொத்த வீதி வெள்ளப்பெருக்கு காரணமாக உடைப்பெடுத்துள்ளதால், குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஹொரவ்பொத்தானை பிரதேசத்தில் நேற்று (02) மாலை பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமைந்துள்ள குளம் ஒன்று உடைப்பெடுத்துள்ளது.
இதனால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீர் வீதியைக் கடுமையாகப் பாதித்துள்ளதுடன், வீதியின் ஒரு பகுதி முற்றாகச் சேதமடைந்து போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குளத்திலிருந்து வெளியேறிய வெள்ளநீர் வீதியை ஊடறுத்துச் சென்றதால், வீதியின் கட்டமைப்பு பாதிக்கப்பட்டு பாரிய உடைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த வீதியைப் பயன்படுத்தி அன்றாடப் பயணங்களை மேற்கொள்ளும் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.