எரிபொருள் நெருக்கடி - அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது குறித்து ஜனாதிபதியின் பணிப்புரை
எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தும் நோக்கில், அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சவால்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் இன்று (15.03.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உருவாகியுள்ள நிலைமையை முன்கூட்டியே கணிக்க முடியாது எனவும், வளர்ந்து வரும் புதிய சவால்களைத் தொடர்ந்து கண்காணித்து ஒரு நாடாக அவற்றுக்குக் கூட்டு முயற்சியுடன் முகம் கொடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு
தெரிவு செய்யப்பட்ட சில அரச ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு தரப்பினரிடமிருந்து இது குறித்த ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சுமன ஆலோக்க பண்டார தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிவாயு மற்றும் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடி
இந்த நிலையிலேயே எரிபொருளை சிக்கனமாக உபயோகிக்கும் நோக்கில் இந்த திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுமன ஆலோக்க பண்டார மேலும் கூறுகையில், எரிசக்தி நெருக்கடி ஏற்படும் காலங்களில் உலகின் பல நாடுகளும் இத்தகைய வேலைத்திட்டங்களைச் செயல்படுத்துவது வழமையாகும்.
இலங்கையிலும் கடந்த கோவிட் தொற்றுக் காலத்தில் வீட்டிலிருந்தே பணியாற்றும் முறை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது தொடர்பான தீர்க்கமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.