ஹட்டனில் பாரிய மகளிர் பேரணி : 35 ஆயிரம் கையொப்பங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு
ஹட்டன் மாநகரத்தில் "பெருந்தோட்ட பெண்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம்" எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடை பவனியானது, நேற்று (09.03.3034) மாலை ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமாகி ஹட்டன் திருச்சிலுவை ஆலயம் வரை சென்றடைந்து அங்கு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது.
இதன்போது, பொது மக்களிடமிருந்து சுமார் 35,000 கையொப்பங்கள் திரட்டி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கையொப்பம் சேகரிப்பு
மேலும், 'பெண்களின் உரிமையை வென்றெடுப்போம், உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெற்றுக் கொடுப்போம், பெண்களையும் தாயாக மதிப்போம், பெண்களின் சுகாதாரத்தை மேன்மைப்படுத்துவோம், போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சி படுத்திய வண்ணம் ஊர்வலம் நடாத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து, வருகை தந்தவர்களிடம் கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வு இடம் பெற்றது.
மேலும், வெ்வவேறு பிரதேசங்களிலும் வருகை தந்த பெண் தலைமைத்துவ தலைவர்கள் தோட்டங்களுக்கு சென்று அனைவரிடமும் கையொப்பம் சேகரித்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு
இதன்போது, நுவரெலியா மாவட்டத்திலேயே 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கையொப்பங்களை தயார் செய்து ஜனாதிபதி, தொழில் அமைச்சர் மற்றும் பொறுப்பு கூறக்கூடிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்நிகழ்ச்சி திட்டத்தை தனியார் நிறுவனமொன்றின் பெருந்தோட்ட பிரிவு இணைப்பாளர் உட்பட உத்தியோகத்தர்கள் ஒழுங்கு செய்திருந்தனர்.
மேலும், குறித்த பேரணியில் சுமார் 250 பேர் பங்கு பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |