பெண்களின் அமைதியான போக்கு அத்துமீறல் அதிகரிக்க காரணம்: பொலிஸார் குற்றச்சாட்டு
பெரும்பாலான பெண்கள் எந்த வகையான துன்புறுத்தலுக்கு முகங்கொடுத்தாலும், அமைதியாக இருப்பது, பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் அதிகரிக்க தூண்டுகிறது என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பேருந்துகள் மற்றும் தொடருந்துகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளை தவறாக நடத்தும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், 2024, பெப்ரவரி முதல் ஜூன் வரை பொது போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் தொடர்பாக 34 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 12 பேர் பொது இடங்களில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள்
அத்துடன், தமது நடவடிக்கைக்கு சாதகமான பலன் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.
நெரிசலான பேருந்துகள் அல்லது தொடருந்துகளில் பயணம் செய்யும் போது பெண்கள் பல்வேறு வகையான உடலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர்.
இது தொடர்பில் தினசரி அடிப்படையில் கணிசமான எண்ணிக்கையினர் கைது செய்யப்படுகின்றனர்.
இருப்பினும், தமது நடவடிக்கையின் போது அனைத்து பேருந்துகளையும் கண்காணிப்பது என்பதில் சவால் உள்ளது என்று தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு சமூகப் பிரச்சனையாகவே உள்ள நிலையில், ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) 2015 ஆம் ஆண்டு ஆய்வின் அடிப்படையில், பெரும்பாலான குற்றம் செய்பவர்கள் பொதுவாக பெண்களின் மௌனத்தால் அதிகம் பயனடைகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
எனவே பொதுப் போக்குவரத்தில் பெண்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுப்பதற்கு எத்தனை விதிமுறைகள் வகுக்கப்பட்டாலும், மக்களின் மனப்பான்மை இன்னும் மாற வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 15 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட 90% க்கும் அதிகமான பெண்கள் பொது போக்குவரத்தில் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு உள்ளாகின்றனர்.
எனினும் 4% க்கும் குறைவானவர்களே தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது சட்ட நடவடிக்கையை மேற்கொள்கின்றனர் என்று ஐக்கிய நாடுகளின் பதிவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் இலங்கையைப் போன்று பொதுப் போக்குவரத்தில் பயணிகள் தவறாக நடந்து கொள்ளும் நாடு வேறு எங்கும் இல்லை என்று அமைச்சர் குமாரசிங்க கூறியுள்ளார்.
எனினும், பல பெண்கள் மற்றும் சிறுமிகள் பொலிஸ் நிலையத்தில் முறையிடுவதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |