அதிவேக நெடுஞ்சாலைகளில், காசாளர்கள் 20 சதவீத கட்டணத்தை திருடுவதாக குற்றச்சாட்டு
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில், காசாளர்கள் 20 சதவீத கட்டணத்தை திருடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று நெடுஞ்சாலைகள் செயலாளர் ரஞ்சித் சுபசிங்க, நாடாளுமன்ற கோப் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
காசாளர்களின் வேலைநிறுத்தத்தின் போது இராணுவம் சாவடிகளை இயக்கிய நாட்களில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நெடுஞ்சாலை கட்டணங்கள் அதிகரித்ததாக குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே ஏனைய நாட்களில் வசூல் குறித்து அவர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
கட்டணங்கள் கையாடல்
இராணுவம் சுங்கச்சாவடிகளை இயக்கிய நாட்களின் அடிப்படையில், ஏனைய நாட் களில் குறைந்தபட்சம் 10 முதல் 20 சதவிகிதம் வருவாய் கசிவு உள்ளது என்று ரூபசிங்க கோப் குழுவின் முன் குறிப்பிட்டுள்ளார்.
கட்டணங்களை கையாடல் செய்ததாக கூறப்படும், 19 காசாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர், ஆனால் சுங்கச்சாவடிகளை இயக்க போதுமான காசாளர்கள் இல்லை என்பதால், அவர்கள் இடைநிறுத்தப்படவில்லை என்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர், நாடாளுமன்ற குழுவிடம் தெரிவித்துள்ளார்.
இதன்போது, மோசடியில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டவர்கள் அரச சேவையில் எவ்வாறு தொடர்கின்றனர் என கணக்காய்வாளர் நாயகம் அலுவலகப் பிரதிநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தநிலையில், மின்னணு கட்டண முறை அடுத்த ஆண்டு, நடைமுறைக்கு வரும் வரை சேவை ஒப்பந்தங்களில், ஆட்களை வேலைக்கு அமர்த்தவும், குற்றம் சுமத்தப்பட்டவர்களை பணிகளில் இருந்து அகற்றவும் கோப் குழு அமர்வின் போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிசிரிவி கருவிகளின் தொடர்பு கம்பிகளை எலிகள் கடித்தமையால் அவை இயங்கவில்லை என்றும், இதனை பயன்படுத்தியே வீதிக்கட்டணங்கள் திருடப்பட்டுள்ளதாகவும் கோப் குழுவிடம், தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
