ஈழத்தமிழ் வீராங்கனைகளின் பங்களிப்புடன் இலங்கை பெண்கள் அணியினர் வரலாற்றுச் சாதனை
இந்தியாவில் இடம்பெற்று வரும் கொமன்வெல்த் கபடி சம்பியன்ஷிப் 2026 தொடரில் அபார திறமைகளை வெளிப்படுத்திவரும் இலங்கை பெண்கள் கபடி அணி அரையிறுதிக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
முதலாவது கொமன்வெல்த் கபடி சம்பியன்ஷிப் தொடர் இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு ஈழத்தமிழ் வீராங்கனைகளை உள்ளடக்கிய மதுரிகா ஹன்சமாலி தலைமையிலான இலங்கை மகளிர் கபடி அணி, தொடக்கத்திலிருந்தே அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
தொடர் வெற்றி
இலங்கை தேசிய பெண்கள் கபடி அணியில் இடம்பெற்றுள்ள ஈழத்தமிழ் வீராங்கனைகளான பிரியவர்ணா ராசதுரை மற்றும் டிலக்ஷனா விமலேந்திரன் ஆகியோர் இந்தத் தொடரில் அற்புதமான முறையில் விளையாடி அணியின் தொடர் வெற்றிகளுக்குப் பெரும் பக்கபலமாக இருந்து வருகின்றனர்.

இத்தொடரில் 'குரூப் பி' பிரிவில் களமிறங்கிய இலங்கை அணி; ஸ்கொட்லாந்து, கென்யா, இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய பலமான அணிகளுடன் மோதித் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தியது.
தனது முதல் போட்டியில் ஸ்கொட்லாந்தை எதிர்கொண்ட இலங்கை அணி 53 – 10 என்ற புள்ளிகள் கணக்கில் மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்தது. 22 ரைடு மற்றும் 20 தற்காப்புப் புள்ளிகளை அள்ளியதோடு, எதிரணியை 10 முறை ‘ஓல்-அவுட்’ செய்து அசத்தியது.
இரண்டாவது போட்டியில் பலம்பொருந்திய கென்யா அணியை எதிர்கொண்ட இலங்கை அணி, கடைசி வரை போராடியபோதிலும் 23 – 20 என்ற புள்ளிகள் கணக்கில் குறுகிய புள்ளி வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்ட இலங்கை வீராங்கனைகள் 65 – 16 என்ற புள்ளிகள் கணக்கில் எதிரணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றனர். சர்வதேச கபடி தரவரிசையில் 4 ஆம் இடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த பங்களாதேஷ் அணியை நேற்று திங்கட்கிழமை எதிர்கொண்ட இலங்கை அணி, 31 – 20 என்ற கணக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவுசெய்து அரையிறுதியை உறுதி செய்தது.
நான்கு லீக் ஆட்டங்களில் விளையாடிய இலங்கை அணி மூன்று வெற்றிகள் மூலம் 6 புள்ளிகளைப் பெற்று 'குழு-பி' பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கென்யா அணி 6 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. இதேபோன்று 'குழு-ஏ' பிரிவில் இந்திய அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், உகண்டா அணி 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. அதற்கமைய இந்தியா, உகண்டா, இலங்கை மற்றும் கென்யா ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதியில் களம் காண்பது உறுதியாகியுள்ளது.
பட்டத்து இளவரசரின் படுகொலை... திகிலூட்டும் 3 கணிப்புகளை வெளியிட்ட அமெரிக்க நாஸ்ட்ராடாமஸ் News Lankasri