ஓமானில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெண்கள்
ஓமான் தலைநகர் மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் சுரக்ஸா இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்கள் ஏழு பேர் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, கிண்ணியா மற்றும் மட்டக்களப்பை சேர்ந்த பெண்கள்
இவர்கள் இன்று அதிகாலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
நாடு திரும்பிய இந்த பெண்கள் சிலாபம் வென்னப்புவை, திருகோணமலை, கிண்ணியா மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமானில் சுரக்ஸா இல்லத்தில் 118 இலங்கை பெண்கள் தங்க வைக்கப்பட்டிருந்ததுடன் அவர்களில் 11 பேர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் ஆவணங்களின் உள்ள சிக்கல்கள் காரணமாக இவர்களில் நான்கு பேருக்கு நாடு திரும்ப முடியாமல் போயுள்ளது.
இதனையடுத்து ஏனைய ஏழு பேர் நாடு திரும்பியுள்ளனர். ஓமானில் வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக அனுப்பி வைக்கப்படும், இலங்கை பெண்கள் பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இதில் சிக்கிய பெண்கள், தாம் இருந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்று ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.