ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற்றம்: அமெரிக்க வாக்காளர்களுக்கு ஈரான் பகிரங்கக் கோரிக்கை
ஈராக்கில் எஞ்சியிருந்த அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியுள்ள நிலையில், அமெரிக்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து ஈரானின் இஸ்லாமியப் புரட்சிப் படை (IRGC) 26 பக்கங்கள் கொண்ட திறந்த மடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க வாக்காளர்களை நோக்கி வெளியிடப்பட்டுள்ள அந்த மடலில், போரை ஆதரிக்கும் தற்போதைய அரசியல்வாதிகளைப் பதவியிலிருந்து அகற்றுமாறும், வெளிநாட்டு இராணுவத் தலையீடுகள் மற்றும் இஸ்ரேலுக்கான ஆதரவை நிராகரிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இராணுவ நடவடிக்கை நிறைவு
23 ஆண்டுகால இராணுவ நடவடிக்கை நிறைவுக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்கப் படைகள் வெளியேறியதை ஈரான் தனது வெற்றி எனக் கொண்டாடி வருகிறது.
அதேவேளை, அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர கத்தார் தூதுவர் வழியிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தில் தொடரும் பதற்றம்
ஈரானின் அணுஆயுதத் திட்டத்தைத் தடுப்பதே தமது பிரதான நோக்கம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள போதிலும், ஈரான் அதனை மறுத்து அமைதி வழிப் பயன்பாட்டிற்காகவே தொழிநுட்பத்தை உருவாக்குவதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தில் தொடரும் பதற்றம் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.