மின் தடை தொடர்பில் அமைச்சரின் புதிய அறிவிப்பு
நாட்டில் மின் தடையை நடைமுறைப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகும்.
செலவு குறைந்த மற்றும் நம்பகமான மின் உற்பத்தி ஆதாரங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் தற்போதைய நிலைமை முகாமைத்துவம் செய்யப்பட்டு வருகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலக்கரி கொள்வனவு
இதேவேளை, 2025 - 2026ஆம் ஆண்டிற்கான நிலக்கரி கொள்வனவு செயன்முறையில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனால், அதன் சுமையை மக்கள் மீது சுமத்தப் போவதில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

ஜனாதிபதியும் இந்த நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளார். நிலக்கரி விநியோகத்தில் தவறிழைத்த நிறுவனங்களிடமிருந்து அபராதங்களை அறவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
சட்ட நடவடிக்கை
அவ்வாறு அறவிடப்படும் தொகை போதுமானதாக இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிதி சுமையை திறைசேரியோ அல்லது பொதுமக்களோ ஏற்கத் தயாராக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.