வெளிநாடு சென்ற இலங்கை வைத்தியர்கள் நாடு கடத்த திட்டம் - அரசாங்கம் அதிரடி நடவடிக்கை
வெளிநாடு சென்ற வைத்தியர்கள் மற்றும் உரிய நடைமுறைகள் இன்றி வெளிநாடு சென்றவர்களை உடனடியாக நாடு கடத்துமாறு அந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதுவர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது 100க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் உரிய நடைமுறைகள் இன்றி வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் மேலும் சிலர் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளனர்.
வைத்தியர்களை நீக்க நடவடிக்கை
உத்தியோகபூர்வ அங்கீகாரம் பெறாமல் வைத்தியர்கள் வெளிநாடு சென்றால், நிறுவன சட்டத்தின் பிரகாரம் சேவையில் இருந்து விலகியவர்கள் என பதிவை நீக்க வேண்டியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயிற்சிக்காக வெளிநாடு சென்ற சில வைத்தியர்களும் இலங்கைக்கு வர மறுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சு அதிரடி நடவடிக்கை
முறையான நடைமுறைகள் இல்லாமல் வெளிநாடு செல்லும் மருத்துவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் ஜே.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் முறையான நடைமுறைக்கு அமைய வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரும் வைத்தியர்களுக்கு அனுமதி வழங்க பின் வாங்க மாட்டோம் என பிரதிப் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.