கந்தளாயில் காட்டு யானை அட்டகாசம் : அச்சத்தில் மக்கள்
திருகோணமலை - கந்தளாய், பன்சலகொடல்ல பகுதியில் யானை செய்த அட்டகாசத்தால் மின்சாரக் கட்டமைப்பு பெரும் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், இன்று (31.12.2025) அதிகாலை 4:00 மணியளவில் நடந்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
யானை தாக்குதல்
அதிகாலையில், குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை, முதலில் அப்பகுதியிலுள்ள வயல் நிலங்களைச் சேதப்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வீதி ஓரத்தில் இருந்த மின் கம்பம் ஒன்றின் மீது யானை தாக்குதல் நடத்தியதில், மின் கம்பம் முறிந்து விழுந்துள்ளது.

மின் கம்பம் சரிந்து விழுந்ததில், குறித்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மின்சார மீட்டர் (Electricity Meter) முழுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வீட்டிற்கான மின்சார விநியோகம் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மின்சார சபை ஊழியர்கள், உடனடியாக இடத்திற்கு வருகை தந்து, பாதுகாப்பு கருதி சேதமடைந்த மின்சாரக் கட்டமைப்புகளைக் கழற்றிச் சென்றுள்ளதுடன் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது போன்று தொடர்ச்சியாக இந்த பகுதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


