கோட்டாபய தொடர்பில் ரணிலிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கைக்கு திரும்புவதற்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை வரும் கோட்டாபய
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி ரோஹினி மாரசிங்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர் நிமல் கருணாசிறி ஆகியோரின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வரமாட்டார். அவர் நாடு திரும்புவதற்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய ஜனாதிபதிக்கு ஆணைக்குழு இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது.
ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதிக்கான சிறப்புரிமைகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன, இந்த விடயத்தில் தலையிட்டு ஆராயுமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.