இலங்கையில் விமான நிலையங்களை முழுமையாக மூட வேண்டிய நெருக்கடியான நிலை
இலங்கையில் உள்ள விமான நிலையங்களின் செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, போக்குவரத்துத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
டீசல் கிடைக்காததால் பயணிகள் போக்குவரத்து சேவைகள் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இதனால், 90 சதவீத தனியார் பேருந்துகள் இன்னும் இயங்கவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் மக்கள் தமது போக்குவரத்துத் தேவைகளை ரயில்கள் மற்றும் உள்ளூர் பேருந்துகள் மூலம் பூர்த்தி செய்துகொண்டனர்.
தற்போதைய சூழ்நிலையால் விமான நிலைய செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான நிலையத்தை நடத்துவதற்கு அத்தியாவசியமான ஊழியர்களே தற்போது பணிக்கு அழைக்கப்படவுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, தெரிவித்துள்ளார்.
நாட்டின் விமான எரிபொருள் கையிருப்பும் வேகமாக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, இலங்கை வருவதற்கும் புறப்படுவதற்கும் எரிபொருளை கொண்டு வருமாறு சர்வதேச விமான நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.
இத்தகைய பின்னணியில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிலை என்ன என்பதனை அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கும் சிறிய அளவிலான எரிபொருள் மாத்திரமே கிடைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவில் விமான சேவை அதிகார சபையுடன் இணைந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எரிபொருள் பெறுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.