கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்வு - மேல் கொத்மலை நீர்த்தேக்க வான்கதவுகள் திறப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்து வருகின்றது.
இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள காசல்ரீ, கெனியன், மவுசாக்கலை, விமலசுரேந்திர, லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய மற்றும் மேல் கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது.
வான்கதவுகள் திறப்பு
அக்கரப்பத்தனை, டயகம உள்ளிட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீரேந்தும் பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் தொடர்ந்தும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இதனால் கொத்மலை ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அவற்றுக்கு அருகில் சென்று புகைப்படங்கள் மற்றும் செல்ஃபிகள் எடுப்பதைத் தவிர்க்குமாறும் பாதுகாப்புத் தரப்பினர் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

பாதிப்பு
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் தேயிலை உற்பத்தி மற்றும் விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, மழையுடனான காலநிலை நிலவும் பகுதிகளில் வசிக்கும் மக்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளை அண்மித்த பகுதிகளில் அவதானத்துடன் செயற்படுமாறும், அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

