வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள அர்னாப்! இலங்கை மீதான பாதிப்பு குறித்து வெளியான புதிய அறிவிப்பு
புதிய இணைப்பு
வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள “அர்னாப்” புயல் காரணமாக இலங்கைக்கு நேரடிப் பாதிப்புகள் எதுவும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வங்காள விரிகுடா நடுக்கடற்பரப்பில் நிலவிய ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது “அர்னாப்” புயலாக வலுப்பெற்றுள்ளது என்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இன்று(26.10.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று திங்கட்கிழமை அதிகாலை நிலவரப்படி, இந்தப் புயலானது வங்காள விரிகுடாவின் நடுக்கடற்பரப்பில், குறிப்பாக இந்தியாவின் அந்தமான் தீவுகளுக்கு அருகிலுள்ள ஸ்ரீ விஜயபுரத்துக்கு (போர்ட் பிளேர்) கிழக்கே சுமார் 590 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
இந்தப் புயல் மேலும் தீவிரமடைந்து அதிதீவிரப் புயலாக மாறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ள போதிலும், இதனால் இலங்கைக்கு நேரடிப் அச்சுறுத்தல் எதுவும் இல்லை.
28 ஆம் திகதி இந்தியாவுக்கு திரும்பும் புயல்
புயலின் மறைமுக வக்ர சுழற்சி காரணமாக நாட்டில் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை தொடர்ந்து நிலவும். வடமத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான கனமழை எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசன்துறை தொடக்கம் கொழும்பு ஊடாகக் காலி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும்.
வங்காள விரிகுடாவின் ஆழமான நடுக்கடற்பரப்புகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் அலைகள் சீற்றத்துடனும் காணப்படும் என்பதால், ஒக்டோபர் 26, 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் ஆழ்கடலுக்குச் செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தப் புயல் எதிர்வரும் 28 ஆம் திகதியளவில் இந்தியாவின் ஒடிசா மாநிலக் கரையைத் தாண்டிச் செல்லும் எனக் எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பின்னரே இலங்கையில் நிலவும் இந்தச் சீரற்ற காலநிலை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றார்.
மேலதிக தகவல் - ராகேஷ்
நான்காம் இணைப்பு
வங்காள விரிகுடாவில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது 'அர்னாப்' சூறாவளியாகப் பாரியளவில் வலுவடைந்துள்ளது என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாகத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த இன்று (26.10.2026) மீன்பிடிச் சமூகத்தினருக்கு அவசர விசேட எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளார்.
இன்று வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, குறித்த 'அர்னாப்' சூறாவளியானது இலங்கைத் தீவுக்கு வடக்குக்கும் கிழக்குக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூறாவளி வரும் நாளில் மேலும் தீவிரமடைந்து, மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும் என்று வானிலை அவதானிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
சூறாவளியின் தாக்கம் காரணமாக வடக்குக் கடற்பகுதிகளில் வீசும் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 100 கிலோமீற்றர் வரை அல்லது அதற்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைச் சூழவுள்ள அனைத்துக் கடற்பகுதிகளும் மிகவும் கொந்தளிப்பான நிலையிலும் சீற்றத்துடனும் காணப்படும் என்றும் கடற்றொழில் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கு கடற்பகுதிகளில் ஏற்கனவே மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படகுகள் மற்றும் கடற்தொழிலாளர்கள், சூறாவளியின் மையப்பகுதி மற்றும் அது நகரக்கூடிய பாதையிலிருந்து உடனடியாக இயன்றவரை விலகிப் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், கடற்றொழிலாளர்கள் அனைவரும் எதிர்வரும் நாள்களில் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து மிக அவதானமாகக் கண்காணிப்பதுடன், திணைக்களமும் கடற்படையும் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கண்டிப்புடன் பின்பற்றிச் செயற்படுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
செய்தி - ராகேஷ்
மூன்றாம் இணைப்பு
வங்காள விரிகுடாவின் கிழக்கு - மத்திய பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், "அர்னாப்" என்று பெயரிடப்பட்ட சூறாவளியாக வலுவடைந்துள்ளது.
இது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, இன்று (அக்டோபர் 26, 2026) காலை 8:30 மணி நிலவரப்படி, காங்கேசன்துறைக்கு வடகிழக்கே சுமார் 1,100 கி.மீ தொலைவில், 15.4° வடக்கு அட்சரேகை மற்றும் 88.5° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் மையம் கொண்டுள்ளது.
இந்த சூறாவளி மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 26, 2026 அன்று மாலை 5:30 மணிக்குள், இது வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய பகுதியில் மேலும் வலுவடைந்து, தீவிர சூறாவளியாக மாறக்கூடும்.
இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 27, 2026 அன்று இது மேலும் வலுவடைந்து மிகத் தீவிர சூறாவளியாக மாற வாய்ப்புள்ளது. அக்டோபர் 28ஆம் திகதி காலை, இது ஆந்திரப் பிரதேசம் வழியாக இந்தியக் கடற்கரையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10° வடக்கு முதல் 20° வடக்கு அட்சரேகைகளுக்கு இடையிலும், 80° கிழக்கு முதல் 95° கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடையிலும் உள்ள கடல் பகுதிகளில், காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 80 – 100 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்; இதனுடன் பலத்த இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.
மேலும், இக்கடல் பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 3.0–4.0 மீட்டர்கள் வரை உயரக்கூடும் என்பதால், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே, மறு அறிவிப்பு வரும் வரை இப்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
தற்போது இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடற்தொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர், இந்தச் சூழல் குறித்து வானிலை ஆய்வுத் துறை வெளியிடும் அடுத்தடுத்த முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகளைக் கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இரண்டாம் இணைப்பு
வங்காள விரிகுடாவின் கிழக்கு - மத்திய பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது, அர்னாப் என்ற புயலாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அது மேற்குத் திசையில் நகர்ந்து, இன்று காலை 05.30 மணிக்கு வடஅகலாங்கு 15.4° N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 88.9° E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பெரும்பாலும் மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து, ஒக்டோபர் 26ஆம் திகதி அன்று ஆறு மணியளவில் மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு பாரிய புயலாகவும் ஒக்டோபர் 27அன்று அதே பிராந்தியத்திற்கு மேலாக தீவிர புயலாகவும் வலுவடையும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இது தொடர்பான வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


முதலாம் இணைப்பு
வங்காள விரிகுடாவின் கிழக்கு - மத்திய பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு நோக்கி நகர்ந்து, தற்போது 15.3° வடக்கு அட்சரேகை மற்றும் 89.7° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் நிலை கொண்டுள்ளதாகவும், இந்த அமைப்பு தொடர்ந்து மேற்கு திசையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
சூறாவளியாக மாறும் சாத்தியம்
இன்றைய தினத்திற்கான (26.10.2026) காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும், இன்று (அக்டோபர் 26) வங்காள விரிகுடாவின் கிழக்கு - மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு கடல் பகுதிகளில் இருக்கும்போது, இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து சூறாவளியாக (cyclonic storm) மாறக்கூடும்.

அதனைத் தொடர்ந்து, இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 27, 2026 வாக்கில் வங்காள விரிகுடாவின் மேற்கு - மத்திய பகுதியில் தீவிர சூறாவளியாக (severe cyclonic storm) வலுவடைய வாய்ப்புள்ளது.
இந்த அமைப்பினால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு ஏதுமில்லை என்றாலும், இந்த அமைப்பை நோக்கிய காற்றின் ஓட்டம் இலங்கையின் ஊடாகச் செல்வதால், அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழையுடனான காலநிலை
வடக்கு, மேல், சபரகமுவ, தெற்கு, வடமேற்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இப்பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில், பிற்பகல் 1 மணிக்கு மேல் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வட - மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், அத்துடன் திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் 40 - 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்க, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனப்பட்டுள்ளது.
