அநுர அரசை நிச்சயம் ஒழிப்போம்..! ராஜபக்சக்களின் ஆதரவாளர் சத்தாதிஸ்ஸ தேரர் சூளுரை
தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசை விரைவில் இல்லாது ஒழிப்போம். எதிர்காலத்தில் தேர்தலொன்று நடத்தப்படும் பட்சத்தில் மக்கள் தீர்ப்பு ஊடாக அதனை நிச்சயமாகச் சாதித்துக் காட்டுவோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் நெருக்கமான பிக்குகள் தரப்பைச் சேர்ந்த இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகளின் செயற்பாடுகள் மற்றும் சமீபத்திய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான முறையில் போராட்டம்
இது தொடர்பில் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மேலும் தெரிவிக்கையில், "இந்த நாட்டில் பௌத்த பிக்குகள் தூங்குவதைப்போல வெளிப்படையாகத் தோன்றினாலும், அவர்கள் எப்போதும் விழிப்புடனேயே இருக்கின்றார்கள்.

தகுந்த நேரத்தில் விழித்தெழுவார்கள். அரசை விரட்டுவதற்காகத் தலைக்கவசங்களை அணிந்துகொண்டு பொல்லுகளுடன் நாங்கள் வீதிக்கு இறங்கப் போவதில்லை.
மாறாக, நாட்டில் தேர்தலொன்று நடத்தப்படும் பட்சத்தில் நாங்கள் நிச்சயமாக உங்களை (அரசை) இல்லாது ஒழிப்போம்.
புனித பூமிகளில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் பிக்குகளுக்கு முழுமையான உரிமை உண்டு. அது ஒன்றும் எவரது தனிப்பட்ட உயர்பாதுகாப்பு வலயம் அல்ல என்பதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
பொலிஸாரின் நிலைப்பாடு
பிக்குகள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிக்கு இராஜாங்கன தேரர் வருகை தரவுள்ளார் என்ற தகவல் பொலிஸாருக்கு ஏற்கனவே நன்கு தெரிந்திருந்தது.

இருப்பினும், அவர்கள் இராஜாங்கன தேரரைத் திட்டமிட்டே தடுத்து நிறுத்தவில்லை.
இவ்வாறான மோதல் அல்லது குழப்ப நிலைமைகள் அங்கே நிகழவேண்டும் என்பதே பொலிஸாரின் நிலைப்பாடாகவும் மறைமுக விருப்பமாகவும் இருந்தது" என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.