இறுதிக்காலத்தில் தாயுடன் இருக்க பிணை கோரும் நாமல் - இருதய பாதிப்பால் அவதிப்படும் ஷிரந்தி!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தாயாருக்கு இதயத்தில் 95 சதவீத அடைப்பு ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால், அவரைக் கவனிப்பதற்காக நாமல் ராஜபக்சவுக்கு பிணை வழங்கியது நியாயமானது என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பெற்றோரின் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் சிலர் இயந்திரங்களைப் போன்று நடந்துகொள்ளலாம். ஆனால் தனது தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தபோது, நாமல் ராஜபக்சவால் அவ்வாறு நடந்துகொள்ள முடியாது என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
இந்தச் சூழ்நிலையை அசாதாரணமான காரணமாகக் கருத முடியாது எனக் கூறுவது மனிதாபிமானமற்ற செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரிஷ் கொடுக்கல் வாங்கல்
கிரிஷ் (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்சவுக்கு, கடந்த நவம்பர் 3ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது. இந்தப் பிணை உத்தரவு சட்டத்திற்கு முரணானது எனக் கூறி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC), அதனைச் சவாலுக்கு உட்படுத்தி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

பிணை உத்தரவை இடைக்காலத் தடை உத்தரவு மூலம் இடைநிறுத்துமாறும் ஆணைக்குழு கோரியுள்ளது. ஆணைக்குழுவின் சட்ட விவகாரங்களுக்கான உதவிப் பணிப்பாளர் தனுஜா பண்டார இந்த கோரிக்கையை நீதிமன்றத்தில் விடுத்துள்ளார்.
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149(1) பிரிவின்படி, ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் சந்தேகநபர், வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் அசாதாரணமான சூழ்நிலைகளில் மட்டுமே பிணை வழங்குவதற்கு சட்டத்தில் விதிவிலக்கு உள்ளது.
பிணை மறுப்பு
நாமல் ராஜபக்சவுக்கு பிணை வழங்கியதில் நீதவான் அந்த விதிவிலக்கைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். மேலும், நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், முன்னர் அச்சம் காரணமாக சாட்சியமளிக்கத் தயங்கிய இருவர் முன்வந்து சாட்சியமளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் சாட்சியாளரான நிமல் பெரேரா, தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி தற்போது அவுஸ்திரேலியாவில் வசிப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நாமல் ராஜபக்ச பிணையில் அனுமதிக்கப்பட்டால், சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படக்கூடும் என ஆணைக்குழு அச்சம் வெளியிட்டது. நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஆணைக்குழுவின் கோரிக்கையை வன்மையாக எதிர்த்துள்ளார்.
95 சதவீத இருதய அடைப்பால் அவஸ்தைப்படும் ஷிரந்தி
நாமல் ராஜபக்ச இதுவரையில் விளக்கமறியலில் இருப்பதால், ஆணைக்குழுவின் மனுவில் அவசரத் தேவை என்ன? இடைக்கால நிவாரணமாகக் கோரப்படுவது, பிரதான மனுவில் கோரப்படும் இறுதி நிவாரணத்திற்குச் சமமானதாகும்.

மேலும், வழக்கு விசாரணை முடிவடைவதற்கு முன்னர், இறுதி நிவாரணத்தை இடைக்காலத் தடை உத்தரவாக வழங்க முடியாது என உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் தெரிவிக்கின்றன. பிரதான நீதவான் சட்ட வரம்பிற்குள் இருந்தே பிணை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவின் தாயாருக்கு இதயத்தில் 95 சதவீத அடைப்பு இருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய சூழ்நிலையை எவ்வாறு சாதாரணமானதாகக் கருத முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார, நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவை இடைநிறுத்தக் கோரும் இடைக்காலத் தடை உத்தரவு தொடர்பான தீர்மானத்தை 2026 நவம்பர் 18ஆம் திகதி அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் முடக்கம்... லொறிகளில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முன்னெடுக்கும் மத்திய கிழக்கு நாடு News Lankasri
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விவகாரம்: வெளிப்படையாக எதிர்ப்பு துவங்கியது News Lankasri