இந்திய விமான நிலையத்தில் சிக்கிய இலங்கையர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
இலங்கை ஆட்கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை இந்தியாவின் தேசியப் புலனாய்வு முகவரகம் கைது செய்துள்ளது.
இன்டர்போல் சிவப்பு அறிவித்தலின் கீழ் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட, நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுமடம் இம்ரான் என அடையாளம் காணப்பட்ட குறித்த சந்தேகநபர், இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்ட பின்னர் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசியப் புலனாய்வு முகவரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்கடத்தல் வலையமைப்பு
இந்த வழக்கில் 15 ஆவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள இம்ரான், கைது செய்யப்படுவதைத் தவிர்த்துத் தலைமறைவாகி இருந்துள்ளார்.

சந்தேக நபர் இலங்கைப் பிரஜைகளை உள்ளடக்கிய ஆட்கடத்தல் வலையமைப்பு தொடர்பில் தேடப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளது.
செல்லுபடியற்ற ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி இலங்கையர்களை இந்தியாவுக்குக் கடத்தும் சதித்திட்டத்தில் இம்ரான் தீவிரமாக ஈடுபட்டதாகப் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களின் பயண ஏற்பாடுகளைச் செய்வதற்காக அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து சந்தேகநபர் பணம் வசூலித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களை கடத்துவதற்கும் தடுத்து வைப்பதற்கும் வசதியாக, சட்டவிரோத ஹவாலா வழிகள் மூலம் இந்தியாவிலுள்ள ஏனைய சந்தேகநபர்களுக்கு அவர் பணத்தை மாற்றியுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.