யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நியமனத்தில் முரண்நகை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிரந்தரப் பதிவாளர் பதவிக்கான தெரிவுச் செயல்முறையில் முரண்நகை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நியமனச் செயல்முறையின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வவுனியா பல்கலைக்கழகத்தின் பதிவாளர், அப்பல்கலைக்கழகத்தில் ஏழாட்டை விடுமுறையில் இருக்கும் நிலையில், 2026 ஒக்டோபர் மாதம் முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆணைக்குழு கவனத்தில் கொண்டுள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்ட்டுள்ளது.
பதிவாளர் பதவி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நிரந்தரப் பதிவாளர் பதவிக்கான தெரிவில், பதில் பதிவாளர், போட்டியிடும் ஒரு விண்ணப்பதாரியாக இருப்பாராயின், தெரிவுச் செயல்முறை நடைபெறும் காலப்பகுதியில் பதில் பதிவாளர் பதவியில் தொடர்ந்து செயற்படுவது நலன் முரண்பாடு தொடர்பான சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

பதில் பதிவாளர் பதவியுடன் தொடர்புடைய அதிகாரம் மற்றும் செல்வாக்கு, பதிவாளர் பதவிக்கான தெரிவுச் செயல்முறையில் குறித்த வேட்பாளருக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தக்கூடும் என்ற கரிசனையையும் வெளிப்படுத்தியுள்ளது.
எனவே, குறித்த பதில் பதிவாளர் நிரந்தரப் பதிவாளர் பதவிக்கான விண்ணப்பதாரியாக இருப்பின், நடைமுறையிலுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைவாக, தெரிவுச் செயல்முறை நிறைவடையும் வரை அவர் பதில் பதிவாளர் பதவியிலிருந்து விலக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவையான நடவடிக்கை
மேலும், பதிவாளர் நியமனச் செயல்முறையின் நேர்மை, நடுநிலைத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நடைமுறை நியாயத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதுடன், எந்தவொரு விண்ணப்பதாரிக்கும் முறையற்ற சாதகமான வாய்ப்பு அல்லது தெரிவுச் செயல்முறையில் செல்வாக்குச் செலுத்தும் நிலை ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்துமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், உரிய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு அமைவாகத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.