லாஃப்ஸ் எரிவாயு விலை விவகாரம் – சபாநாயகருடன் நேருக்கு நேர் மோதிய சஜித்! சபையில் வெடித்த சர்ச்சை
லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் திடீர் விலையேற்றம் மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், சபாநாயகர் மற்றும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவுக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
லாஃப்ஸ் எரிவாயு விலையேற்றத்தை அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகக் கருதி, நிலையியற் கட்டளை 92(2) இன் கீழ் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்றுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முற்பட்டபோதே இந்த சர்ச்சை ஆரம்பமானது.
சபையில் சலசலப்பு
பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் குரல் கொடுப்பதற்கு தனக்கு உரிமை உள்ளதாக சஜித் பிரேமதாச இதன்போது வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர் மற்றும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, பொருளாதார ரீதியான விலையேற்றங்களை ஒழுங்குப் பிரச்சினையாக முன்வைக்க முடியாது எனத் தெரிவித்தனர்.
வாக்கெடுப்பு அல்லது நாடாளுமன்ற நடவடிக்கைகளின்போது ஏற்படும் நடைமுறைத் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கே ஒழுங்குப் பிரச்சினைகள் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், பொதுவான பிரச்சினைகளை விவாதிப்பதற்கான வழிமுறை அதுவல்ல எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள கேள்வியை முன்வைக்குமாறும் அல்லது ஆசனத்தில் அமருமாறும் சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவருக்கு பலமுறை அறிவுறுத்தினார்.
எரிவாயு விலையேற்றம்
எனினும், எரிவாயு விலையேற்றம் தொடர்பில் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும், இதனால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச தொடர்ந்து வலியுறுத்தினார்.

இதனால் சபையில் நீண்ட நேரம் கடும் வாக்குவாதம் நீடித்தது. இந்நிலையில், லாஃப்ஸ் எரிவாயு விலையேற்றம் தொடர்பில் கேள்வி எழுப்புவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
நாடும் நாட்டு மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமை கவலைக்குரிய விடயம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.