அரசியல் எதிர்காலத்தை பணயம் வைத்தே தீர்மானங்களை எடுக்கின்றோம்: பிரதமர் பகிரங்க அறிவிப்பு
ஜனரஞ்சகமான தீர்மானங்களை எடுப்பதற்கு பதிலாக கடினமான மற்றும் சிரமமான தீர்மானங்களை எடுக்க நேரிடும் காலத்திற்குள் தற்போதைய அரசாங்கம் வந்துள்ளதாகவும் அரசியல் எதிர்காலத்தை பணயம் வைத்தே அந்த தீர்மானங்களை எடுப்பதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ( Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நாடு மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்காக கடினமான தீர்மானங்களை எடுக்க அரசாங்கம் தயார். அரசாங்கம் அப்படியான தீர்மானங்களை எடுக்கும் போது ஊடகங்களும் நாட்டுக்காக மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
ஊடகத்துறை அமைச்சு ஊடகவியலாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ள காப்புறுதித் திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதி சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களால் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வரவும், ஆட்சியை கவிழ்க்கவும் முடியும். எனினும் ஊடகங்களால் அரசாங்கத்தை பாதுகாக்க முடியாது.
ஆட்சியாளர்களால் மாத்திரமே அரசாங்கத்தை பாதுகாக்க முடியும். ஊடகங்கள் அரசாங்கத்தை காப்பாற்றினால், அவர்களுக்கு இதனை பெரிய காப்புறுதியை வழங்க நேரிடும் எனவும் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.