ஒட்டுசுட்டான் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரின் அறிவிப்பின்றிய நடவடிக்கை : இடர்படும் மக்கள்
முல்லைத்தீவு (Mullaitivu) ஒட்டுசுட்டான் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் பொதுமக்களை பழிவாங்கும் நோக்குடன் செயற்பட்டு வருகின்றனரா என்ற கேள்வி நுகர்வோரால் எழுப்பப்பட்டு வருகிறது.
முன்னறிவிப்பின்றி நீர் வெட்டினை நடைமுறைப்படுத்தி உள்ளமையினால் கடந்த 02ஆம் திகதி தாங்கள் எதிர்பாராத சிரமங்களுக்கு உள்ளாகி இருந்ததாக சிவநகர் மக்கள் பலர் குறிப்பிட்டிருந்தனர்.
நீர்க் கட்டண விபரத்தினை குறுஞ் செய்திகளாக அனுப்பி வைக்கும் நீர் வடிகாலமைப்பு சபையினருக்கு நீர் வெட்டினையும் அவ்வாறு குறுஞ் செய்தியாக அனுப்பி வைக்க முடியாத சூழல் எப்படி தோன்றியிருக்கும் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
கடந்த மாதம் நீர் வடிகாலமைப்பு சபையினருக்கு எதிராக சிவநகர் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து இருந்தனர்.
சரியான திட்டமிடல்களை மேற்கொண்டிருந்தால் நீர் வளமிக்க ஒட்டுசுட்டானில் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கலாம் என்பதும் நோக்கத்தக்கது.
திடீர் நீர் வெட்டு
அது மாத்திரமன்றி, கடந்த 3ஆம் திகதி நண்பகல் ஒரு மணியிலிருந்து நீர் வராமையினை தான் அவதானித்ததாக சிவநகரில் வதியும் வயோதிப மாது ஒருவர் குறிப்பிட்டார்.
மேலும், முன்னறிவிப்பு இருந்திருந்தால் நீரினை எடுத்து வைத்திருந்திருக்கலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடுமையான வெப்பம் நிலவி இன்றைய நாட்களில் நீரில்லாத சூழல் விபரிக்க முடியாதளவு கடினங்களை தனக்கு ஏற்படுத்துவதாகவும் கட்டுக்கிணறு தன்னிடம் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
அயலில் குழாய்க் கிணறுகளை கொண்டுள்ளவர்களிடம் இருந்து தான் நீரினை பெற வேண்டும் என அவர் தான் எதிர் கொண்ட எதிர்பாராத சிரமங்களை எடுத்துரைத்து, தன் ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.
ஏன் குழாய் நீர் வரத்து தடைப்பட்டுள்ளது என மற்றொருவரிடம் கேட்ட போது "குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் நீர் வரவில்லை. அது சீர் செய்யப்பட்டதும் நீர் வழமைபோல் வரும்" என விபரித்திருந்தார்.
நடந்தது என்ன?
ஒட்டுசுட்டான் நீர்வழங்கல் வடிகாலமைப்பினூடாக மக்களுக்கு வழங்குவதற்கென போதியளவு நீரினை பெற்றுக்கொள்ள முடியாமையினால் நீர் பகிர்ந்தளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
சிவநகர், சின்னச்சாளம்பன், வித்தியாபுரம் ஆகிய கிராமங்களில் 48 மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக நீர் கிடைத்தால் அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு நீர் வெட்டு நடைமுறையில் இருக்கும். எனினும் இந்த நடைமுறை தொடர்பான விரிவான தகவல்களை பெறுவதில் இடர்பாடுகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நடைமுறை ஒட்டுசுட்டான் மக்களை பழிவாங்கும் செயற்பாடாக இருக்கலாம். ஒட்டுசுட்டான் பிரதேச செயற்பாடுகள் தொடர்பில் பல்லூடக செய்திப் பரப்பு செய்திகளை தொடர்ந்து அவதானித்து வருவதன் மூலம் தான் சந்தேகிப்பதாக ஊடகத்துறை சார் கற்றலில் ஈடுபட்டு வரும் ஒருவரின் கருத்தாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னறிவிப்பு அவசியம்
"சிறந்த வியாபார முகாமைத்துவம் என்பது நுகர்வோரை திருப்திப்படுத்துவதில் இருக்கின்றது. சிறந்த பொதுச் சேவை என்றால் அது சேவை பெறுநரின் மனத்திருப்தியில் இருக்கின்றது" என முகாமைத்துவம் பற்றிய உரையாடலின் போது பேசிய ஒய்வு பெற்ற அரச உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
ஏற்படும் தடங்கல்களை உடனுக்குடன் நுகர்வோருக்கு வழங்கும் நடைமுறையானது ஆரோக்கியமான முன்னகர்வுகளுக்கு வழிவகுக்கும்.
தேசிய நீர் வடிகாலமைப்பு சபையினரின் நோக்கமாக "தொழில்நுட்ப மற்றும் சேவைச் சிறப்பின் மூலம் இலங்கையின் அதிஉன்னத பொது வசதிகள் நிறுவனமாக இருத்தல்" என குறிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே அடைய விரும்பும் குறிக்கோளாக "பாவணையாளின் பூரண திருப்தியை உறுத்திப்படுத்திக் கொண்டு குடிநீர் மற்றும் சுகாதாரத்திற்கான நிலையான தீர்வுகளை வழங்குவதன் மூலம் நாட்டுக்கு சேவை புரிதல்" என குறிக்கப்பட்டிருப்பதும் இங்கே நோக்கத்தக்கது.
பழிவாங்கும் செயற்பாடா?
ஒட்டுசுட்டான் நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையினரால் நீர்வழங்கல் செயற்பாட்டிற்கான கட்டடத்தொகுதியினை மட்டுமே சிவ நகரில் அமைப்பாகவும் நீரினை பெற்றுக்கொள்ளும் கிணறுகளை அமைக்கப்போவதில்லை என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
நீர் வடிகாலமைப்பு வளாகத்திற்குள் 300 அடி ஆழத்தில் குழாய்க்கிணறு அமைக்க முற்பட்ட போது அதனை மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றின் மூலம் தடுத்து நிறுத்தியிருந்ததாக ஒட்டுசுட்டான் நகரில் வாழ்ந்துவரும் வர்த்தகர் ஒருவர் இது தொடர்பில் எடுத்துரைத்து இருந்தார்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் நீர் வடிகாலமைப்பு வளாகத்தினைச் சூழவுள்ள மக்களும் ஒட்டுசுட்டான் பகுதி மக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
மக்களின் ஆர்ப்பாட்டத்தினால் தடுத்து நிறுத்தப்பட்ட குழாய்க்கிணறு தோண்டும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு 300 அடி வரை தோண்டப்பட்டு உள்ளதாகவும் அறிய முடிகின்றது. எனினும் 300 அடி ஆழத்தில் இருந்து நீர் வழங்கல் தேவைகளுக்கு நீரினை பெற்றுக்கொள்ள மாட்டோம் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |