தண்ணீர் பிரச்சினையால் வந்த வினை: ஹட்டனில் குடும்பஸ்தர் பரிதாப உயிரிழப்பு!
ஹட்டன், ருவன்புர பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குடிதண்ணீர் விநியோகம் தொடர்பாக ஏற்பட்ட தர்க்கம் பாரிய மோதலாக மாறியதிலேயே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ருவன்புர பகுதியில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிதண்ணீர் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, கடந்த 24 ஆம் திகதி முதல் இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ச்சியாக வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.
இந்தத் தர்க்கம் முற்றிய நிலையில் இரு குழுக்களும் மோதிக்கொண்டதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வன்முறைச் சம்பவம்
காயமடைந்தவர்களில் பலத்த காயங்களுக்கு உள்ளான 39 வயதுடைய நபர், கண்டி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ருவன்புர பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த மோதலில் காயமடைந்த ஏனையோர் தற்போது டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களில் உயிரிழந்தவரின் சகோதரரும் ஒருவராவார் எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்கள், நேற்று ( 28.02.2026 ) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மத்திய கிழக்கில் போர் பதற்றம்! இலங்கையிலிருந்து வெளியேற தடுமாறும் வெளிநாட்டவர்களுக்கு அவசர அறிவிப்பு
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan