அதிகரித்து வரும் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை! விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
இலங்கையில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது சுமார் 20 லட்சம் இலங்கையர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்டுதோறும் சுமார் 40,000 பேருக்கு புதிய புண்கள் ஏற்படுவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை
கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சத்திரசிகிச்சைத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ரெஸ்னி காசிம், இந்த நீரிழிவு புண்கள் பலரால் உணரப்படுவதைவிட மிகவும் ஆபத்தானவை என்றும், சில சமயங்களில் புற்றுநோயை விடவும் கடுமையானவை என்றும் எச்சரித்தார்.

தற்போது சுமார் 100,000 நீரிழிவு நோயாளிகள் இலங்கையில் புண்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் பலருக்குக் கால் அகற்றல் தேவைப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
உயர் சர்க்கரை அளவு காரணமாக ஏற்படும் நரம்பு பாதிப்பு, இரத்த ஓட்டம் குறைவது மற்றும் கல்சியம் படிதல் ஆகியவையே சிறிய புண்கள் கூட சிக்கலாவதற்கான முக்கிய காரணங்கள் எனக் குறிப்பிட்ட அவர், கால் அகற்றப்பட்டால், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் மூன்றில் இரண்டு பங்கினர் இறக்க நேரிடும் என்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
நுரையீரல் புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் ஆகியவற்றைத் தவிர, மற்ற அனைத்துப் புற்றுநோய்களைக் காட்டிலும் நீரிழிவு காரணமாகக் கால் இழந்தவர்களின் விகிதமே மிக மோசமாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
எனவே, ஊனம் மற்றும் மரணத்தை ஏற்படுத்தும் சிக்கல்களைத் தவிர்க்க, நீரிழிவு நோயாளிகள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிப்பதும், ஆரம்பகால நோயறிதலும், சரியான பாதப் பராமரிப்பும் மிக அவசியம் என்று இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        