லெபனானில் எந்நேரமும் மீண்டும் போர் வெடிக்கலாம்: இஸ்ரேல் இராணுவ தளபதி அதிரடி எச்சரிக்கை!
லெபனானில் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிகப் போர்நிறுத்தம் மிகவும் பலவீனமாக உள்ளதால், ஹிஸ்புல்லா அமைப்புடன் மீண்டும் போர் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை எதிர்கொள்ள இஸ்ரேலியப் படைகள் எந்நேரமும் முழுப் போர்த் தயாராக இருக்க வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவ தலைமைத் தளபதி இயல் ஜமீர் எச்சரித்துள்ளார்.
தெற்கு லெபனான் பகுதியில் நிலைகொண்டுள்ள இஸ்ரேலியப் படைகளைப் பார்வையிட்ட பின்னர் பேசிய அவர், அச்சுறுத்தல்களை முற்றிலுமாக ஒழிக்கவும், தேவைப்பட்டால் உடனடியாகத் தாக்குதல் நிலைக்கு மாறவும் வீரர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதிரடி எச்சரிக்கை
இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்களால் ஹிஸ்புல்லா அமைப்பு பெரும் பின்னடைவைச் சந்தித்து மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்ட ஜமீர், அந்த அமைப்பு மீண்டும் தனது பலத்தைப் பெருக்குவதைத் தடுப்பதில் இஸ்ரேல் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகளை விலக்கிக் கொள்ளுமாறு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையிலும், இஸ்ரேல் தனது எல்லைப் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் தயார்நிலையைத் தீவிரப்படுத்தியுள்ளமை இதன்மூலம் தெளிவாகிறது.