மேற்கு ஆசிய நெருக்கடி : ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு மேலும் நிதி நெருக்கடி
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் மற்றும் விமான எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக, ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
2026/27 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய இழப்பு 35.6 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது.நிறுவனத்தின் மொத்த வருமானம் 82.8 பில்லியனாக அதிகரித்தபோதிலும், எரிபொருள், பராமரிப்பு, வெளிநாட்டு நாணய இழப்பு மற்றும் நிதிச் செலவுகள் காரணமாக நட்டம் தொடர்கிறது.
விமான எரிபொருள் கிடைப்பதில் தட்டுப்பாடு
ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் 3.4 பில்லியன் ருபாய் நிகர வருமானத்தால் குழுமத்தின் மொத்த நட்டம் 32.2 பில்லியனாகக் குறைந்துள்ளது.

2026 ஜூன் மாத நிலவரப்படி நிறுவனத்தின் சொத்துக்கள் 209.9 பில்லியன் ரூபாய்களாகவும், கடன்கள் 561.4 பில்லியனாகவும் காணப்படுகின்றன.
விமான நிறுவனத்தின் குறுகியகால நிதித் தேவைக்காக அரசாங்கம் 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
நிறுவனத்தின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக மூலோபாய மற்றும் மறுசீரமைப்புக் குழுவொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிடையில், மேற்கு ஆசிய மோதலால் விமான எரிபொருள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மேலும் விலையை உயர்த்தியுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி விபுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.