ட்ரம்பின் தேர்தல் பின்னடைவு உலகத்துக்கே பெரும் நிம்மதி! இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஏற்பட்டுள்ள தேர்தல் பின்னடைவு உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நிவாரணமாக அமைகின்றது எனவும், மக்களின் தீர்ப்பை மதித்து அவர் உடனடியாகப் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அவர் மேற்கொண்டு வந்த பயங்கரவாதச் செயற்பாடுகளினால் முழு உலகமும் கடுமையான துன்பத்துக்கு ஆளாகியிருந்தது என்று சுட்டிக்காட்டிய அவர், உலக அமைதியை வலியுறுத்தும் சர்வதேசத் தீர்ப்பாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.
ட்ரம்புக்கு மிகப்பெரிய பதிலடி
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை பொறுப்புகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இலங்கை விமானப்படை செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்திற்கான குறைநிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ரவூப் ஹக்கீம் எம்.பி மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
"அமெரிக்காவில் இடம்பெற்ற இடைக்காலத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்குப் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. அவருக்கு ஏற்பட்ட இந்தத் தோல்வி எம் அனைவருக்கும் ஒரு பெரும் நிவாரணமாகவே அமைகின்றது. ஏனெனில் அவர் முன்னெடுத்த இராணுவவாத நடவடிக்கைகளினால் உலக சமூகம் பேரழிவைச் சந்தித்தது.

தான் ஆட்சிக்கு வந்தால் போர்களுக்குச் செல்லப்போவதில்லை என அளித்த வாக்குறுதியை மீறியமை மற்றும் குடியகல்வு தொடர்பான கடுமையான தீர்மானங்களுமே அமெரிக்க மக்கள் ட்ரம்புக்கு வழங்கிய மிகப்பெரிய பதிலடியாகும். எனவே, அமெரிக்க மக்களின் தீர்ப்பை மதித்து அவர் போரை நிறுத்த வேண்டும்.
அதேபோன்று, இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவும் பாலஸ்தீனம் மற்றும் லெபனானுடனான போரை உடனடியாக நிறுத்த வேண்டும். அதேநேரம், இலங்கையில் தற்போதைய அரசு பல்வேறு புதிய சட்டமூலங்களைக் கொண்டுவருகின்றது.
அவற்றுள் பெரும்பாலானவை சிவில் உரிமைகளை முடக்கும் அடக்குமுறைச் சட்டங்களாகவே அமைந்துள்ளன. அத்துடன், அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் நலன்புரி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தல் தொடர்பான சட்டமூலம் ஒன்றையும் அரசு கொண்டுவரவுள்ளது. இந்தச் சட்டமூலமானது நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதை விடவும் அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே கொண்டுவரப்படுகின்றது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இரத்துச் செய்வதாகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், தற்போது ஜனாதிபதி தனது வாக்குறுதிக்கு முற்றிலும் மாறாகச் செயற்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
சர்வதேச மற்றும் உள்நாட்டு அமைப்புகள் பலவும் இதனை எதிர்த்து வரும் நிலையில், அரசு உடனடியாக இது தொடர்பில் கவனம் செலுத்தி இந்த அடக்குமுறைச் சட்டமூலங்களை வாபஸ் பெற வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.