மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வைத்திய அதிகாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக அரச மருத்துவ அதிகாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தியும் சுகாதார துறையில் நிலவும் பிரச்சினை தீர்க்குமாறு கோரியும் இன்று(06.11.2026) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், மருத்துவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் சுகாதாரத் துறையில் நிலவும் பல்வேறு நெருக்கடிகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தியும் இதன்போது கவனயீர்ப்பு பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.
பேரணி
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் எஸ்.மதனழகன் தலைமையிலான வைத்தியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
வைத்தியசாலையில் பிரதான நுழைவாயிலில் இருந்து பேரணியாக வருகைதந்து வைத்தியசாலை நிர்வாக பணிமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் "இலங்கை மருத்துவ சேவையை" உடனடியாக ஸ்தாபிக்க வேண்டும், அறிவார்ந்த உழைப்புச் சுரண்டப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும், "வைத்தியர்களை நாட்டை விட்டு விரட்டாதே", தகுதியுள்ள மருத்துவ வல்லுநர்கள் பொருளாதாரக் காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறும் சூழலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடமாற்றப் பிரச்சினைகள்
இதன்போது விசேட வைத்திய நிபுணர் மதன் அழகன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு வைத்தியர்களுக்கான ஆளணி ஒதுக்கீடு புதுப்பிக்கப்படாததால் கடும் பணிச்சுமை ஏற்படுவதாகவும், போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் பிள்ளைகளின் பாடசாலை இடமாற்றப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், நிறுத்திவைக்கப்பட்ட மேலதிக சேவை மற்றும் விடுமுறை நாள் கொடுப்பனவுகளை மீண்டும் வழங்கி, 2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு புதுப்பிக்கப்படாத 'டிஏரி' கொடுப்பனவு மற்றும் விசேட வைத்திய நிபுணர்களுக்கான நிலுவைகளை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.







