ஏழு இலட்சம் பேர் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் பெரும் சிக்கலில் இலங்கை
ஏழு இலட்சம் இலங்கையர்களின் அஸ்வெசும கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாட்டில் வறுமை மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
சிங்களத் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார பிரச்சினைகள்..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகள் தற்போது அதிகரித்துள்ளன. இன்றைய நிலவரப்படி, உணவுப் பணவீக்கம் 8.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வேலையின்மை அதிகரித்துள்ளது. மக்கள் வாழ்வதற்குத் தேவையான வருமான அதிகரிப்பு காணப்படவில்லை. மக்களின் வாங்கும் சக்தி நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. ரூபாவின் பெறுமதியும் குறைந்து வருகின்றது.

இதனால், சமூகத்தில் பெரும் அதிருப்தியும், அமைதியின்மையும் உருவாகி வருகின்றன. இந்தச் சமூக அதிருப்தி எந்த நேரத்தில் வீதிகளில் மக்கள் போராட்டங்களாக வெடிக்கும் என்ற கேள்வியும் எழுகின்றது.
நாட்டில், வறுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இன்றைய நிலவரப்படி, ஏழு இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் அஸ்வெசும கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டதன் மூலம், நாட்டில் வறுமை மேலும் அதிகரிக்கும் நிலைமை உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.