அபராதத்தை செலுத்த கால அவகாசம் கோரும் முன்னாள் அமைச்சர்
அபராதத் தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மீதொட்டமுல்ல பிரதேசத்தில் வர்த்தகர் ஓருவரிடம் 64 மில்லியன் ரூபா கப்பம் கோரிய சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் பிரசன்ன ரணதுங்கவிற்கு 25 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதத்தை தவணை அடிப்படையில் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்குமாறு ஏற்கனவே கோரியிருந்தார்.

இந்த நிலையில் 16 மில்லியன் செலுத்தியுள்ளதாகவும் எஞ்சிய 9 மில்லியன் ரூபாவினை செலுத்த கால அவகாசம் வழங்குமாறும் பிரசன்ன ரணதுங்க நீதிமன்றில் கோரியுள்ளார்.
இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் வழக்கினை எதிர்வரும் 2027ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.
மேல் மாகாண முதலமைச்சராக கடமையாற்றிய காலத்தில் பிரசன்ன ரணதுங்க, மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் கிஹான் மெண்டிஸ் என்ற வர்த்தகரை அச்சுறுத்தி 64 மில்லியன் ரூபா கப்பம் கோரியதாகவும் இதில் 15 மில்லியன் ரூபா பெற்றுக்கொண்டதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்திருந்தது.
இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்த வழக்கினை விசாரணை செய்த மேல் நீதிமன்றம் பிரசன்ன ரணதுங்கவிற்கு 25 மில்லியன் ரூபா அபராதமும் பாதிக்கப்பட்டவருக்கு 10 மில்லியன் ரூபா நட்டஈட்டையும் வழங்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
அபராதம் செலுத்தத் தவறினால் 9 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.