யாழ்.வேலணை பகுதியில் உருக்குலைந்த நிலையில் இரு சடலங்கள் மீட்பு
யாழ்ப்பாணம் - வேலணை செட்டிபுலம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரண்டு சடலங்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அவதானித்த அப்பகுதி மக்கள், இன்று (06.11.2026) ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஊர்காவற்றுறை பொலிஸார் குறித்த வீட்டைச் சோதனையிட்டபோது, அங்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு சடலங்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த இருவரும் 73 மற்றும் 74 வயதுடைய முதியவர்களே இவ்வாறு சடலாமாக மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் முத்துலிங்கம் புவனேஸ்வரி மற்றும் சுப்பிரமணியம் பாலசுந்தரம் ஆகிய இரு வயோதிபர்களே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் மற்றும் உயிரிழப்பு இடம்பெற்ற காலப்பகுதி தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.