மர்மமாக உயிரிழந்துகிடந்த இளம் மருத்துவ பீட மாணவி - இறுதியில் அனுப்பிய குறுஞ்செய்தியில் வெளியான தகவல்
காலி- கராபிட்டிய மருத்துவ பீட மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவியொருவர் தொடருந்து கடவைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட விசாரணையில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
கடந்த (3) ஆம் திகதி அதிகாலை பாலத்திற்கு அருகில் உள்ள தொடருந்து தண்டவாளத்தை ஆய்வு செய்ய வந்த திணைக்கள ஊழியர் ஒருவர் வீதியில் கிடந்த பெண் ஒருவரின் சடலத்தை பார்த்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.
மன அழுத்தம் மற்றும் கல்வி நெருக்கடி
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர், காலியில் உள்ள கராபிட்டிய மருத்துவ பீடத்தில் மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவியான 25 வயதுடைய பெலியத்த, வலஸ்முல்ல வீதியைச் சேர்ந்த படபெண்டி கவிந்தி யுக்மணி சில்வா என அடையாளம் காணப்பட்டார்.

அவரது பிரேதப் பரிசோதனையில், அவர் உயிரிழந்த நேரத்தில் எதிர்கொண்டிருந்த மன அழுத்தம் மற்றும் கல்வி நெருக்கடி குறித்த பல உணர்வுப்பூர்வமான விபரங்கள் வெளிப்பட்டுள்ளன.
மேலும், அவர் தனது பெற்றோருக்கும் கணவருக்கும் அனுப்பிய கடைசி குறுஞ்செய்திகள், துயர சம்பவத்தின் மௌனச் சான்றுகளாக பார்க்கப்படுகிறது.
உயிரிழந்த மாணவியின் தந்தை வாக்குமூலம்
உயிரிழந்த மாணவியின் தந்தை, காலி மரண விசாரணை அதிகாரி முன் வழங்கிய சாட்சியத்தில், தனது மகள் மூன்றாவது முறையாக பரீட்சை எழுதி மருத்துவப் பீடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு நான்காம் ஆண்டு படித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
அவரும், அக்மீமன, தலகஹா பகுதியை சேர்ந்த அவரது கணவரான 23 வயது விசாமிதா விசாரத விஜேநாயக்கவும் சுமார் நான்கு ஆண்டுகளாக காதல் உறவில் இருந்து வந்ததாகவும், இரு தரப்பினரின் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர்களது திருமணம் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவரது குடும்ப வாழ்க்கையில் எந்த குடும்ப பிரச்சினையோ அல்லது பிளவோ இல்லை என்றும், ஆனால் படிப்பின் அழுத்தம் அவரது வாழ்க்கையை கடுமையாக பாதித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
"எனக்கு வேலை அதிகமாக இருக்கிறது, நான் மன அழுத்தமாக உணர்கிறேன், நான் ஓய்வெடுக்கக் கோவிலுக்கு செல்ல வேண்டும்," என்று அவர் சமீபத்தில் தன் தாயிடம் கூறியிருந்த நிலையில் பின்னர் அவரது கணவர் அவரைக் கோவிலுக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு, தனக்கு வேலை அதிகமாக இருப்பதாலும், தனியாகப் படிக்க வேண்டியிருப்பதாலும் வீட்டிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று அவர் தன் கணவரிடம் கூறியிருந்த நிலையில்,நவம்பர் 2 ஆம் திகதி பல்கலைக்கழகத்திற்குத் திரும்பியுள்ளார்.
இதன்பின்னர் மீண்டும் இரவு சுமார் 10.22 மணியளவில் குறுஞ்செய்தியில், "படிப்பை முடித்து நீங்கள் ஒரு நல்ல இடத்திற்கு செல்வதற்காக நான் காத்திருக்கிறேன். கவனமாக இருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்பின்னர் அதே நாளில், நள்ளிரவு சுமார் 12.00 மணியளவில், அவர் தந்தையின் கைபேசிக்கு, "அப்பா, நான் உங்களை நேசிக்கிறேன், அம்மாவை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்ற செய்தியையும் அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக தந்தை மகளை மருத்துவ பீட விடுதிக்குபார்வையிட வந்த நிலையில், மகள் அங்கு இல்லை என்பதினை அறிந்துள்ளார். கணவர் பலமுறை தொலைபேசியில் அழைத்திருந்தும் பதிலளிக்கவில்லை.
மரணம் குறித்து திறந்த தீர்ப்பு
இதனையடுத்து பொலிஸாரின் தகவலுக்கமைய மகளின் உடல் கண்டெடுக்கப்பட்டதுடன்,தனது மகளின் மரணத்தில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் பிரேதப் பரிசோதனையின்போது தெரிவித்திருந்தார்.

இந்த மரணம் தொடருந்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டதா அல்லது விபத்தா என்பது குறித்து காலி பொலிஸ் தற்போது ஒரு சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கொழும்பிலிருந்து காலிக்கு வந்துகொண்டிருந்த தொடருந்து மோதியதாக ஆய்வு செய்தபோது கண்டறியப்பட்டபோதிலும், குறிப்பிட்ட காலகட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த இரண்டு தொடருந்துகளின் சாரதிகளும் அவர் மீது தொடருந்து மோதியதைக் காணவில்லை என தெரிவித்துள்ளனர்.
எனவே, அறிக்கை மற்றும் தொடருந்து சாரதிகளிடமிருந்து மேலதிக சான்றுகளைப் பெற வேண்டியதன் அடிப்படையில், காலி தேசிய மருத்துவமனை சிறப்பு தடயவியல் மருத்துவர் மரணம் குறித்து திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.