இலங்கைக்கு எந்தவொரு நாட்டுடனும் பகை கிடையாது! விஜித ஹேரத் திட்டவட்டம்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் இலங்கை எந்தவொரு தரப்புக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை எனவும், சமாதானத்தை வலியுறுத்தி எப்போதும் நடுநிலையான வெளியுறவுக் கொள்கையையே கடைப்பிடிக்கும் எனவும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்று(19.03.2026) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மத்திய கிழக்குப் போர் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் சேமிப்பு வசதி தேவை
கடந்த அரசாங்கத்தால் பொருளாதாரக் குழிக்குள் தள்ளப்பட்ட நாட்டை, கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்டெடுத்து வந்த வேளையிலேயே, 'டிட்வா' புயல் மற்றும் எதிர்பாராத உலகப் போர்ச் சூழல் ஏற்பட்டது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடி எமது அரசாங்கத்தால் ஏற்பட்டது அல்ல. கடந்த கால ஆட்சியாளர்கள் முறையான எரிபொருள் சேமிப்பு வசதிகளை ஏற்படுத்தியிருந்தால், இன்று நாம் இந்தளவு நெருக்கடியைச் சந்தித்திருக்க மாட்டோம்.
நாம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை எரிபொருள் குதங்களை மறுசீரமைப்பதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளோம். ஹோர்முஸ் நீரிணை ஊடாக வரும் கப்பல்களுக்குப் பிரச்சினைகள் இருந்தாலும், இலங்கைக்கு வரும் எரிபொருள் கப்பல்கள் பெரும்பாலும் இந்தியா மற்றும் சிங்கப்பூரிலிருந்தே வருவதால் உடனடிப் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
மேலும், எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் இராஜதந்திர ரீதியில் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கைக்குப் பகை கிடையாது..
ஈரான் கப்பல்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பகிரப்பட்ட தகவல்கள் தவறானவை எனத் தெரிவித்த அமைச்சர், மார்ச் 9 முதல் 13 வரை இலங்கைக்கு வருகை தருவதற்காகப் பெப்ரவரி 26 ஆம் திகதியே அனுமதி கோரப்பட்டதாகவும், சர்வதேச சமுத்திரச் சட்டங்களுக்கு அமையவே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன எனவும் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் சமநிலையற்றதாக இருந்த போது, இலங்கை அதற்கு ஆதரவளிக்கவில்லை என்பதை அவர் நினைவு கூர்ந்தார். எந்தவொரு நாட்டுடனும் இலங்கைக்குப் பகை கிடையாது.
போர் நடவடிக்கைகளை அனைத்து தரப்பினரும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே இலங்கையின் விருப்பம். நாட்டுக்கு நன்மையளிக்கும் வகையில் முறையான இராஜதந்திரக் கொள்கைகளைப் பயன்படுத்தி மக்களைப் பாதுகாப்போம் என உறுதியளித்துள்ளார்.