மௌனம் கலைந்த VFS Global: குற்றச்சாட்டுக்களுக்கு அறிக்கை மூலம் பதில்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகை தரும் விசா வழங்குவது தொடர்பான சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள VFS Global நிறுவனம், தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
VFS Global 2004 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கி வருவதாகவும், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, நோர்வே, ஒஸ்திரியா¸ லட்வியா, ஹங்கேரி, குரோசியா, மோல்டா மற்றும் கிரீஸ் உட்பட 23 அரசாங்கங்களுக்கு விசா விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆறு விசா மையங்களை நடத்தி வருவதாகவும், தமது நிறுவனத்தில் 123க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணிபுரிவதாகவும் தெரிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு
2004 ஆம் ஆண்டு முதல், VFS Global சிறிலங்கா 3.2 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்களைச் செயலாக்கியுள்ளது.
இந்தநிலையில் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை அரசாங்கத்தின் புதிய E-Visa தீர்விற்கான (www.srilankaevisa.lk )பிரதான ஒப்பந்தக்காரராக GBS தொழில்நுட்ப சேவைகள் மற்றும் IVS Global FZCO மற்றும் தொழில்நுட்ப பங்காளியாக VFS Global ஆகியவற்றுடன் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இதன்படி VFS Global விண்ணப்ப செயல்முறை தொடர்பான நிர்வாகப் பணிகளை மட்டுமே நிர்வகிப்பதாகக் கூறியுள்ளது.
விசாவை வழங்குவது அல்லது நிராகரிப்பது என்பது இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தனிப்பட்ட விருப்பத்திற்கு உட்பட்டது என நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த திட்டத்தில் தற்போது மொத்தம் 66 இலங்கையர்கள் பணிபுரிகின்றனர், விரைவில் இந்த எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசா முறையின் டிஜிட்டல் மாற்றம்
ஏற்கனவே தாய்லாந்து, துபாய், ஈக்குவடோரியல் கினியா, அஜர்பைஜான் மற்றும் சுரினாம் உள்ளிட்ட 12 அரசாங்கங்களுக்கு தனது டிஜிட்டல் இ-விசா தளத்தை வழங்கிய அனுபவம் இருப்பதாக VFS Global கூறியுள்ளது.
இதற்கிடையில் விசா முறையின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக, இலங்கை அரசாங்கம் அதன் E-Visa மற்றும் வருகைத்தரு வீசா செயல்முறைக்கு VFS Global இன் டிஜிட்டல் தளத்தை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தது.
அதிகரித்த சுற்றுலா மற்றும் முதலீட்டு வாய்ப்புகளுக்காக, இந்த செயல்முறையை தடையின்றி மேற்கொள்வதே இதன் நோக்கமாக அமைந்திருந்தது.
பயணிகள் அதாவது வீசா விண்ணப்பதாரர்கள், ஒரு மாதம் முதல் 10 ஆண்டுகள் வரையிலான 17 குடியுரிமை இல்லாத விசா வகைகளில் இருந்து வீசாக்களை தேர்வு செய்யலாம்.
இதன் செயல்முறை இணையத்தில் உள்ளது. இது விண்ணப்பதாரர்களுக்கு வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. கூடுதலாக, பயணிகள் ஆங்கிலம், தமிழ், ரஷ்யன், மாண்டரின்-கான்டோனீஸ் மற்றும் ஜெர்மன் ஆகிய ஐந்து மொழிகளில் 24 மணிநேரமும், பிரத்யேக தொடர்பு மையத்தைப் பயன்படுத்தலாம்.
அதேநேரம் தேவையின் அடிப்படையில் இது மற்ற மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று VFS Global தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு எந்த செலவும் இல்லாமல், தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் தொடர்பான அனைத்து முதலீடுகளும் நிறுவனத்தால் ஏற்கப்படுகின்றன.
அனைத்து விசா வகைகளிலும் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட மொத்த சேவைக் கட்டணம் 18.50 டொலர்களாக அறவிடப்படுகிறது
கட்டணச் செயலாக்கக் கட்டணங்கள் மற்றும் பொருந்தக்கூடிய உள்ளூர் வரிகள் ஆகியவை சேவைக் கட்டணத்துடன் கூடுதலாக அறவிடப்படுகிறது என்று VFS Global நிறுவனம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |