வாகன இறக்குமதி மூலம் பெறப்பட்டுள்ள பல பில்லியன் ரூபா வருமானம்
கடந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 63.8 சதவீதம் குறைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு மே 31ஆம் திகதிக்கு இடையில் 1,014 பில்லியன் ரூபா வரவுசெலவுத் திட்ட இடைவெளி காணப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் வரவு செலவுத்திட்ட இடைவெளி 366 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுங்கத்துறை வருமான இலக்கு
முறையான பொருளாதார வேலைத்திட்டத்தின் ஊடாக நாடு முன்னோக்கி நகர்ந்ததன் விளைவாகவே இந்த நிலையை அடைய முடிந்ததாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை சுங்கத்துறையானது அரசாங்கத்தினால் வழங்கப்படும் வருமான இலக்குகளை எப்பொழுதும் பூர்த்தி செய்து நாட்டின் பொருளாதாரத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 1,537 பில்லியன் ரூபா வருமான இலக்கில் 708 பில்லியன் ரூபா வருமானத்தை ஏற்கனவே பூர்த்தி செய்ய முடிந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி
முக்கிய வருமான ஆதாரமாக விளங்கும் வாகனங்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தலேயே சுங்கத்துறையினர் அந்த இலக்குகளை வெற்றிகரமாக அடைந்து வருவது விசேட அம்சமாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, 2018ஆம் ஆண்டு இலங்கைக்குள் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட போது, மொத்த வருமானமான 923 பில்லியன் ரூபாவில் 204 பில்லியன் அல்லது 22 சதவீதம் வாகன இறக்குமதி மூலம் பெறப்பட்டதாக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
2019 ஆம் ஆண்டின் மொத்த வருமானத்தில் 16 சதவீதம் அல்லது 130 பில்லியன் ரூபா வாகன இறக்குமதி மூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |