ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளியான தகவல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா களமிறங்கவுள்ளார் என்றும் நாளைய தினம் இதுதொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும் மொட்டுக் கட்சியின் உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“நாளைய தினம் மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார். அந்தவகையில், வர்த்தகர் தம்மிக்க பெரேரா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புத்திக் கூர்மையான அரசியல் தலைவர் என்று பலரும் இங்கு நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவரைவிட பசில் ராஜபக்ச சிறந்ததொரு தலைவராவார்.
ரணிலைவிட பசிலுக்கு அரசியல் தொடர்பாக நன்றாகத் தெரியும். இதனால்தான் நேற்று மொட்டுக் கட்சி அப்படியானதொரு விசேட தீர்மானத்தை எடுத்தது. நாம் நிச்சயமாக தம்மிக்க பெரேராவை களமிறங்குவோம்.
அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்த பின்னர்தான் பசில் ராஜபக்ச ஓய்வார். ஏனெனில், மொட்டுக் கட்சிதான் நாடளாவிய ரீதியாக பலமானதொரு கட்சியாக இன்னமும் இருந்து வருகின்றது.
ஆகஸ்ட் 15 ஆம் திகதியிலிருந்து நாம் எமது அரசியல் செயற்பாட்டை மேற்கொள்வோம். நாம் ஸ்தாபிக்கவுள்ள அரசாங்கத்தில் நாமல் ராஜபக்ச தான் பிரதமராக பதவியேற்பார். ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் 51 நாட்கள்தான் உள்ளன. அவரால் தொடர்ந்தும் ராஜபக்சவினரை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.
அமைச்சர் கஞ்சன விஜேயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தற்போது ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கினாலும், விரைவிலேயே தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு எமது தரப்பில் வந்து இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது”என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |