பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்: நெடுங்கேணியில் பதற்றம்
புதிய இணைப்பு
வவுனியா - வெடுக்குநாறி மலை ஆதிசிவனார் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக்கோரி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமானது தற்போது நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை அடைந்துள்ளது.
நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தற்போது, தமது ஆர்ப்பாட்டத்தை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பொலிஸ் உயர் அதிகாரிகள் மக்களிடத்தில் உரையாட வருகைதந்தபோதும் அதை புறக்கணித்த மக்கள் அவர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இதன் காரணமாக விசேட அதிரடிப்படியினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
வவுனியா - வெடுக்குநாறி மலை ஆதிசிவனார் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது.
குறித்த ஆர்பாட்டமானானது வவுனியா - நெடுங்கேணியில் தற்போது இடம்பெற்று வருகிறது.
வவுனியா - நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு அருகில் உள்ள சந்தியில் ஆரம்பமான ஆர்பாட்டமானது, தற்போது ஊர்வலமாக நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்லஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், வினோநோதராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
பின்னணி
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6 மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறும், பொலிஸாரின் கட்டளையை மீறும் பட்சத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், ஆலய நிர்வாகத்தினர் பூஜை நிகழ்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த நிலையில், அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்கள் என சுமார் 10 இலட்சம் பெறுமதியான பொருட்களை பொலிஸார் எடுத்துச் சென்றனர்.
இதன் காரணமாக பூஜை வழிபாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பூஜையின்போது கலகம் அடக்கும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆலயத்தில் குவிக்கப்பட்டதுடன், சப்பாத்துக்கள் அணிந்தபடி ஆலயத்துக்குள் புகுந்த பொலிஸார், வழிபாட்டில் கலந்துகொண்ட பெண்களையும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.
செல்வராஜா கஜேந்திரன் தாக்குதல்
இதன்போது ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட வழிபாடுகளில் கலந்துகொண்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்னர். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனை தாக்கி, பொலிஸார் கைது செய்ய முயன்றதுடன், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என தெரியவந்ததையடுத்து, அவரை தூக்கிச் சென்று ஆலய முன்றலில் போட்டுவிட்டுச் சென்றிருந்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்துக்கு வருகை தந்த மக்களுக்கு குடிநீர் வழங்க பொலிஸார் மறுப்பு தெரிவித்தமையால் அங்கு பொலிஸாருக்கும் பக்தர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, பதற்ற நிலை காணப்பட்டது.
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் சிவராத்திரி வழிபாடுகள் காலை முதல் இடம்பெற்று வந்திருந்தது.
இதன்போது காலை முதல் வீதி தடைகளைப் போட்டிருந்த பொலிஸார் ஆலய வளாகத்துக்குள் குடிநீர் எடுத்துச் செல்ல இடையூறு ஏற்படுத்தியிருந்தனர்.
ஆலயத்துக்கு கொண்டுவரப்பட்ட குடிநீர் தாங்கி பொலிஸாரால் 3 கிலோமீற்றருக்கு முன்னுள்ள பகுதியிலேயே தடுத்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து குடிநீரின்றி அவதிப்பட்ட சிறுவர்கள், பக்தர்களுக்காக அருகில் உள்ள ஆற்றில் இருந்து நீர் பெற்றபோதும், அதனையும் பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் குடிநீரின்றி மக்கள் அவதிப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் அரசுக் கட்சி மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன், மற்றும் ஆலய பக்தர்கள் குடிநீர் தாங்கியுடன் வந்த உழவு இயந்திரத்தை ஆலயத்துக்குள் விடுமாறு பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
பொலிஸாரின் செயற்பாடு
சுமார் அரை மணிநேரம் குடிநீரை விடுமாறு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து மாலை 3 மணியளவில் குடிநீரை வழங்க பொலிஸார் இணங்கினர்.
அதன் பின்னர், குடிநீருடன் உழவு இயந்திரம் வந்தபோது அந்த வாகனம் காட்டுப் பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
அதில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.
இவ்வாறான பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட குடிநீரையும் பொலிஸார் மாலை 6 மணியளவில் குடிநீர் தாங்கியை திறந்து வெளியேற்றியிருந்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நிலையில் தமக்கான நீதி வழங்கக் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 12ஆம் திகதி தொடங்கிய குறித்த உண்ணாவிரத போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் நீடித்து வருகின்றது.
கைதுசெய்யப்பட்ட எட்டு பேரில் ஆலய பூசாரியார் ,மற்றும் தமிழ்ச்செல்வன், கிந்துயன், தவபாலசிங்கம், விநாயகமூர்த்தி ஆகியோரே உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
இதேவேளை அவர்கள் வழமை போல உணவினை உட்கொள்வதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, வவுனியாவை சேர்ந்த சட்டத்தரணிகளான கொன்சியஸ் மற்றும் திலிப்காந் ஆகியோர் சிறைச்சாலைக்கு சென்று அவர்களை பார்வையிட்டதுடன் அவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றமையினை உறுதிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் உறவுகள் நீதிகோரி நேற்று வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க அழைப்பு விடுத்திருந்தனர்.
இதன் பின்னணியில் வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |